திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள போத்தம்பாளையம் பகுதியில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் சில மாதங்களாக இரவில் வந்து ஆடு, கோழிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வது வழக்கமாகி வருகிறது.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, போத்தம்பாளையம் பகுதியில் கர்ணன், ராஜசேகர், ராஜேஷ்குமார் ஆகியோரின் தோட்டங்களில் இருந்த 2 நாய்கள் மர்மான முறையில் இறந்துகிடந்தன.

மேலும், ஒரு நாய் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இது தொடர்பாக போலீஸில் புகாரளிக்கப்பட்டு, அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோழி இறைச்சியில் கலந்து வைக்கப்பட்ட உணவை உண்டதால் நாய்கள் இறந்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசும் போலீஸார், “வீடுகள், தோட்டங்களில் வளர்க்கப்படும் கோழி, ஆடுகளைத் திருடுவதற்கு வரும் நபர்களை நாய்கள் துரத்துவதாலும், சத்தமிடுவதாலும் அவர்களால் திருட முடியாமல் போகிறது. தங்களின் திருட்டு முயற்சிக்கு நாய்கள், இடையூறாக இருப்பதால் மர்ம நபர்கள் கோழி இறைச்சியில் விஷம் கலந்து வைத்திருக்கின்றனர். அதை உட்கொண்ட இரண்டு நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டன. மற்றொரு நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்கின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.