Kamal Haasan: தீவிரமாக செயலாற்றுங்கள் – செயற்குழு கூட்டத்தில் கமல் பேச்சு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் விவாதித்தார். இந்த கூட்டத்தில் கமல் ஹாசன் பேசுகையில், “மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைவரும் தொகுதி பிரச்னைகளை முன் நிறுத்தி தீவிரமாக செயலாற்றுங்கள். இது போன்ற கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும். தேர்தலை சந்திக்க நாம் முன் கூட்டியே தயாராக வேண்டும். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும்” என பேசினார்.

முன்னதாக, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- “ஒற்றுமையை” வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்டு வரும் “பாரத் ஜோடோ யாத்திரையில்” பங்கேற்பது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு முடிவை எடுத்த கமல்ஹாசனுக்கு பாராட்டு, யாத்திரையில் பங்கேற்ற நிகழ்வானது, “பெருமை மிகு இந்தியன்” என்று தன்னைக் குறிப்பிடும் தலைவர் அவர்கள், தேச நலனுக்கு பாதிப்பு ஏற்படும் போது கட்சியின் எல்லைகளைக் கடந்து களத்தில் நிற்பார் என்பதை மீண்டும் நிரூபிப்பதாக இருந்தது. 

கடந்த காலங்களில் பாபர் மசூதி இடிப்பு, காவிரிப் பிரச்னை, ஜல்லிக்கட்டு, நீட் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்தபோது மய்யத்தின் தலைவர், தேசநலனை முன்னிறுத்தும் தனது கருத்தை உரத்தகுரலாக எழுப்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராக அருணாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கமல்ஹாசன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.