காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் நேற்று காலமானார். அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அ.தி.மு.க., காங்கிரஸ், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் என பல்வேறு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த எம்.எல்.ஏ-வின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு நேற்று இரவு விமானம் மூலமாக வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து இரவு 10.05-க்கு ஈரோட்டில் உள்ள எம்.எல்.ஏ.வின் இல்லத்துக்கு காரில் வந்தார்.

அவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், நேரு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி. கனிமொழி ஆகியோர் உடன் வந்தனர். முதல்வரின் வருகைக்காக ஈரோட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, மதிவேந்தன், காந்தி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உள்ளிட்டோர் காத்திருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைந்த திருமகன் ஈவெராவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் வந்திருந்த அமைச்சர்களும் ஒருவர் பின் ஒருவராக அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். முதல்வரை கண்டதும் இளங்கோவனும், அவரின் மனைவி வரலட்சுமியும், மற்றொரு மகனான சஞ்சய் சம்பத்தும் கண்ணீர் விட்டு அழுதனர். அவரை தொடர்ந்து கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இளங்கோவனுக்கும், அவரின் மனைவி வரலட்சுமி ஆகியோருக்கு ஆறுதல் கூறினர்.

ராகுல் ஆறுதல்:
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் தொலைபேசி மூலம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
முன்னதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, விஜய்வசந்த், ஜோதிமணி, தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை, தி.க. அமைப்புச் செயலாளர் த.சண்முகம், மாவட்டச் செயலாளர் சென்னியப்பன் உள்ளிட்டோர் மறைந்த திருமகன் ஈவெரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பின் முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ வுமான கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பேட்டியின்போது அவர் கூறியது, “எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் இழப்பு இந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தில் வந்தவர், பெரியார் மண்ணில் அவரின் தந்தையார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மத்திய அமைச்சராக மக்கள் பணியாற்றியவர். அவரின் மகனான திருமகன் ஈவெராவின் மறைவு அவரை பெரும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. இது உண்மையில் ஈடு செய்ய முடியாத இழப்பு.

இந்த இழப்பால் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களும், காங்கிரஸ் பேரியக்க நண்பர்களும், கண்ணீர் சிந்தி கொண்டிருக்க கூடிய இந்த தருணத்தில், அதிமுக சார்பாகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு அவரது உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையத்தில் உள்ள மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இந்த இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அழகிரி உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.