சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 09-11-2022 அன்று வெளியிடப்பட்டது. 1.1.2023 அன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 9.11.2022 முதல் 8.12.2022 வரை மனுக்கள் பெறப்பட்டன.
அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டமன்றத் தொகுதியினைச் சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. ஏற்பளிப்பு செய்யப்பட்ட படிவங்கள் அடிப்படையில் 2023ஆம் ஆண்டிற்கான துணைப் பட்டியல்களுடனான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்த ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (ஜன.5) வெளியிட்டார். இதன்படி சென்னையில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 38,92,457. இதில், ஆண் வாக்காளர் எண்ணிக்கை 19,15,611.பெண் வாக்காளர் எண்ணிக்கை 19,75,788. மற்றவர்கள் 1,058. இந்த வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி உதவி ஆணையாளர் அலுவலங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 32,579. இதில் குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 1,70,125 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 3,07,831 வாக்காளர்களும் உள்ளனர்.