சென்னை, வியாசர்பாடி, மெகசின்புரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (70). இவர், வீட்டில் இறந்துகிடப்பதாக கடந்த 29.12.2022-ம் தேதி வியாசர்பாடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பன்னீர்செல்வத்தின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பன்னீர்செல்வம், கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருப்பதாக டாக்டர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதனடிப்படையில் வியாசர்பாடி போலீஸார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவம் நடந்தபோது அங்கிருந்த செல்போன் சிக்னலையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து கொலைசெய்யப்பட்ட பன்னீர்செல்வம் வீட்டுக்கு யார், யார் வந்தார்கள் என போலீஸார் விசாரித்தனர். அப்போது, பன்னீர்செல்வம் வீட்டில் கொத்தனாராக வேலை செய்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அரெலா மஸ்தானய்யா (44) என்பவர் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. அதனால் அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் அரெலா மஸ்தானய்யாவை தேடிபோது அவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. அதனால் போலீஸாருக்கு அரெலா மஸ்தானய்யா மீதான சந்தேகம் வலுத்தது. அதையடுத்து அவரின் செல்போன் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்தபோது அது ஆந்திராவைக் காட்டியது. இதையடுத்து போலீஸார் அரெலா மஸ்தானய்யாவைப் பிடித்து விசாரித்தபோது, முதியவர் பன்னீர்செல்வத்தை அவர் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து போலீஸார், “முதியவர் பன்னீர்செல்வம் இறந்துகிடந்ததும் சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்திருந்தோம். விசாரணையில் அவர் கொலைசெய்யப்பட்டது தெரியவந்ததும் இந்த வழக்கை கொலை என மாற்றி பதிவுசெய்திருக்கிறோம். கொலை வழக்கில் கைதாகியிருக்கும் அரெலா மஸ்தானய்யா என்பவர் சென்னையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்திருக்கிறார். மேலும் இவர் கொலைசெய்யப்பட்ட பன்னீர்செல்வத்தின் வீட்டிலும் வேலைப்பார்த்திருக்கிறார். அதனால் கடந்த 27.12.2022-ம் தேதி பன்னீர்செல்வத்திடம், 3,500 ரூபாயை கொத்தனார் அரெலா மஸ்தானய்யா கேட்டிருக்கிறார்.

அதற்கு பன்னீர்செல்வம், வேலையை முடித்து விட்டு பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த அரெலா மஸ்தானய்யா, பன்னீர்செல்வத்தின் கழுத்தை நெரித்து கீழே தள்ளி விட்டிருக்கிறார். இதில் பன்னீர்செல்வம் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அரெலா மஸ்தானய்யா அங்கிருந்து தப்பிச் சொந்த ஊரான ஆந்திராவுக்குச் சென்றுவிட்டார். அவரின் செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்து அரெலா மஸ்தானய்யாவைக் கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்.