சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா (22). இவர் கூடுவாஞ்சேரில் உள்ள ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி அரிஷ் (17). முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் ஷோபனா தனது தம்பி அரிஷை மொபெட்டில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்தபோது, வேன் ஒன்று மொபட்டை முந்தி சென்ற போது மொபெட் மீது உரசியது. அதில் இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி ஏறி இறங்கியதில் சக்கரத்தில் சிக்கி ஷோபனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்தில் அவரது தம்பி அரிஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த ஷோபனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
சாலை விபத்தில் தம்பி கண் முன் சாப்ட்வேர் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.