ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொளத்துபாளையம் அருகே ஆராம்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த இளங்கோ மகள் மாலினி ஸ்ரீ. இவர் பி.டெக். ஐ.டி. முடித்து விட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதமாக ஆராம்பாளையம் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வருகிறார்.
இதற்கிடையே, மாலினிஸ்ரீக்கு பெற்றோர் திருமணம் செய்வதற்காக வரன் பார்த்து வந்தனர். ஆனால் அவருக்கு சரியான வரன் அமையவில்லை. இதனால் மனம் உடைந்த மாலினிஸ்ரீ எலி மருந்தை சாப்பிட்டு விட்டு வீட்டில் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
இதையடுத்து, மாலினிஸ்ரீக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் தான் அவர் விஷம் அருந்திய தகவல் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மாலினி ஸ்ரீயை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாலினிஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாகஉயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.