சென்னை: தேர்தல் ஆணையம் கொடுத்த முகவரியின் அடிப்படையில் தான் அதிமுகவிற்கு கடிதம் எழுதப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ இன்று (ஜன.5) வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ” தமிழகத்தில் 18-19 வயதுக்குட்பட்டவர்கள் 4,66,374 பேர் புதிய வாக்காளர்களாக தங்களை இணைத்துள்ளனர். வாக்காளர்கள் தங்களின் விவரங்களை elections.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக சரிபார்க்கலாம். 3 கோடியே 82 லட்சம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் கொடுத்த முகவரியின் அடிப்படையிலேயே அதிமுகவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியின் அடிப்படையில் கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவிற்கு மெசஞ்சர் மூலமாகவும் தபால் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த தகவலையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து விட்டோம். அதன் பிறகு தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.