குஜராத் மாநிலம், கோத்ரா கலவரத்தில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவர் குடும்பத்தார் ஏழு பேரைக் கொலை செய்த வழக்கில், 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தண்டனைக் காலம் முடியும் முன்பே, குஜராத் அரசால் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டனர்.

11 பேரின் விடுதலைக்கு எதிராக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கை விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் பேலா எம் திரிவேதி நியமிக்கப்பட்டிருந்த நிலையில், மனுவை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம் திரிவேதி விலகி உள்ளார்.
நீதிபதி பேலா எம் திரிவேதி இவ்வழக்கில் இருந்து விலகியதால், நீதிமன்றத்தால் உத்தரவை நிறைவேற்ற முடியாது என்று கூறியுள்ளார், நீதிபதி ரஸ்தோகி. ஏற்கெனவே, குற்றவாளிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி திரிவேதி விலகினார்.

குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்யுமாறு கோரி பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், பிற பொதுநல வழக்குகளின் விசாரணையில் இருந்தும் நீதிபதி திரிவேதி இரண்டாவது முறையாக தற்போது விலகி இருக்கிறார். இவ்வழக்கில் இருந்து நீதிபதி விலகுவதற்கான காரணம் என்ன, வழக்கை விசாரிப்பதில் என்ன சிக்கல் உள்ளது போன்றவை தெரிவிக்கப்படவில்லை.