விபத்தில் ஒரு காலை இழந்த சிறுமி குத்துச்சண்டை சாம்பியனாகி சாதனை

குஜராத் மாநிலத்தில் நடந்த மாநில சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிப் பெற்று கவனம் ஈர்த்துள்ளார் 17 வயது வீராங்கனையான கோர்க்கா.  
குஜராத் மாநிலம் வடோதரா பகுதியைச் சேர்ந்த சிறுமி கோர்க்காவுக்கு குத்துச்சண்டை விளையாட்டில் அதீத ஆர்வம். இதற்கான பயிற்சிகள் பெற்று குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சாலை விபத்து அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. ஒருநாள் கோர்க்கா தனது தாயாருடன் பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருக்கையில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்து கோர்க்கா ஒரு கால் ஊனமடைந்தார்.

சிகிச்சைக்குப் பின் குடும்ப வறுமையை சமாளிக்க கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் கோர்க்கா ஈடுபட்டார். பின்னர் அது தவறு என்பதை உணர்ந்த அவர், அத்தொழிலை கைவிட்டு வேறு வேலைக்கு சென்றார். இதற்கு மத்தியில் மீண்டும் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்ள தொடங்கினார். இதுகுறித்த செய்த ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து சிறுமி கோர்க்காவுக்கு உதவ பலரும் முன்வந்தனர்.

image
பாக்ஸி கல்வி என்ற அறக்கட்டளை கோர்க்கா மற்றும் அவரது சகோதரியின் கல்விச் செலவை ஏற்றதுடன், கோர்க்காவின் குத்துச்சண்டை பயிற்சிக்கு தேவையான கட்டணத்தையும் வழங்கி வந்தது. அதனைப் பயன்படுத்தி குத்துச்சண்டை பயிற்சி பெற்றுவந்த நிலையில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளினார் கோர்க்கா. குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்றும் அது ஏற்கனவே சேதமாகியுள்ள ஒரு காலை மேலும் மோசமாக்கி விடும் என்று பலரும் அவரை கேட்டுக்கொண்டனர். ஆனால் பின்வாங்காத கோர்க்கா தொடர்ந்து கடினமாக பயிற்சி செய்தார். இந்நிலையில்தான் குஜராத்தில் நடந்த  100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்ட மாநில சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிப் பெற்று அசத்தி உள்ளார் 17 வயதான கோர்க்கா.

இதுகுறித்து கோர்க்கா கூறுகையில், “இது எனக்கு ஒரு முக்கியமான தருணம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் கிக் பாக்ஸிங்கில் இறங்கியபோது, மாநில சாம்பியன்ஷிப்பை வெல்வேன் என்று நான் நினைக்கவே இல்லை. இது என் நம்பிக்கையில் அதிசயங்களைச் செய்தது. இப்போது என் கவனம் தேசிய போட்டிகளில் இருக்கிறது. இதில் நன்றாக விளையாடி சர்வதேச போட்டிகளுக்கு செல்வேன் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.