பல்லடம்: விசைத்தறிகளும், ஓ.இ. மில்களும் புத்தாண்டில் முழு உற்பத்தியை தொடங்க ஆயத்தமான நிலையில் தற்போது கழிவு பஞ்சு கடும் விலை ஏற்றம் புதிய நெருக்கடியை ஏற்படுத்தி, பரிதவிக்கும் அவல நிலை நிலவுகிறது. தமிழகத்தில் கோவை, வெள்ளக்கோவில், பல்லடம், சோமனூர், உடுமலை, அன்னூர், அவிநாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பஞ்சை மூலப்பொருளாக கொண்டு 2ம் நம்பர் கவுண்ட் முதல் 30ம் நம்பர் கவுண்ட் வரை நூல் உற்பத்தி செய்யும் 450க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் (ஓ.இ) மில்கள் இயங்கி வருகின்றன.
இங்கு தினசரி சுமார் ரூ.15 கோடி மதிப்பில் 14 லட்சம் கிலோ கிரே மற்றும் கலர் நூல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நேரடியாக 75 ஆயிரம் தொழிலாளர்களும் மறைமுகமாக 2 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூல்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் காடா துணி உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் உள்ள விசைத்தறிகளில் கலர் நூல்களை கொண்டு ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஜீன்ஸ் பேன்ட், பெட்ஷீட், லுங்கி, துண்டுகள், தலையணை உறை, மெத்தை விரிப்புகள், பாவாடை துணிகள், நைட்டீஸ் உள்ளிட்ட பல்வேறு ரக துணி ரகங்கள் தயாரிக்கப்படுகிறது.
கழிவு பஞ்சு விலை அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள ஓபன் எண்ட் மில்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிடம் இருந்து மூலப்பொருட்களை பெற்று இந்தியாவுக்கே அதிக லாபத்துடன் ஐரோப்பிய நாடுகள் டயபர் ஏற்றுமதி செய்வதாகவும் தொழில்துறையினர் கூறுகின்றனர். நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யும் பணி, ஓபன் எண்ட் மில்களில் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் 600 ஓபன் எண்ட் மில்கள் இயங்குகின்றன. கழிவு பஞ்சு விலை உயர்வால் ஓபன் எண்ட் மில்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கழிவு பஞ்சு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறும் தொழில் துறையினர் கழிவு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஸ்பின்னிங் மில்கள் கழிவு பஞ்சு விலையை டிமாண்ட், சப்ளையை கருத்தில் கொள்ளாமல் காட்டன் வாங்கும் விலையில் 60 சதம் விலைக்கு கழிவு பஞ்சை விற்க முன்வந்தால் மட்டுமே ஓ.இ. மில்களும், விசைத்தறிகளும் தங்கு தடையின்றி தொழிலில் இயங்க முடியும் என்கின்றனர், அவர்கள். மேலும் இதுகுறித்து தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்கி வருகிறது. இவற்றில் 50 சதம் ஓ.இ.மில்கள் ஸ்பின்னிங் மில்களில் இருந்து வரும் கழிவு பஞ்சை கொண்டு நூல் உற்பத்தி செய்து வருகிறது. இந்த காட்டன் கிரே ஓ.இ.மில்கள் பல்லடம், ஈரோடு, சோமனூர், அவிநாசி பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களுக்கு அனுப்பப்பட்டு காடா துணி தயாரிக்கப்படுகிறது.
கடந்த 4 மாதங்களாக காட்டன் விலை அதிகமானதால் ஸ்பின்னிங் மில்களில் இருந்து வரும் கழிவு பஞ்சு விலை அதிகமாக உள்ளது. காட்டன் விலை ஒரு கண்டி அதாவது 356 கிலோ விலை கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் இருந்த போது கோம்பர் கழிவு பஞ்சு 1 கிலோ ரூ.125 முதல் ரூ.150க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது புதிய காட்டன் பருவத்தில் காட்டன் விலை ஒரு கிலோ 168 ரூபாய் என 356 கிலோ 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் கோம்பர் கழிவு பஞ்சு ஒரு கிலோ ரூ.140 விற்பனையாவது ஓ.இ. மில் நிர்வாகிகளை கடுமையாக அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எனவே பெரும்பாலான ஓ.இ.மில் நிர்வாகத்தினர் கழிவு பஞ்சு கொள்முதல் செய்வதை தவிர்த்து காட்டன் கொள்முதல் செய்து 30 கவுண்ட், 40 கவுண்ட் ஓ.இ.நூல்கள் தயாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
ஏற்கனவே கழிவு பஞ்சு விலை கட்டுபடி ஆகாமல் பாலியஸ்டர் விஸ்கோஸ் காட்டன் பாலிஸ்டர் என செயற்கை நூல் உற்பத்திக்கு ஓ.இ. மில் நிர்வாகத்தினர் மாறி வருகின்றனர். கடந்த 20 ஆண்டு காலமாக கழிவு பஞ்சு விலை 50 சதம் முதல் 60 சதம் காட்டன் கொள்முதல் விலையில் விற்பனை ஆகி கொண்டு இருந்தது. ஆனால் இந்த மாதம் காட்டன் விலையில் 80 சதம் முதல் 90 சதம் விலையில் ரூ.140 ரூபாய் முதல் 145 ரூபாய் வரை கழிவு பஞ்சு விற்பனையாகிறது. இதனால் ஓ.இ. மில்கள் கழிவு பஞ்சை உபயோகிப்பது சிறிது சிறிதாக குறைத்து கொள்ளுமாறு செய்து உள்ளது.
இந்த விலை ஏற்றம் ஓ.இ. மில்களையும் விசைத்தறிகளையும் பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கும் ஏற்கனவே 50 சதம் உற்பத்தியில் உள்ள விசைத்தறிகளும், ஓ.இ. மில்களும் புத்தாண்டில் முழு உற்பத்தியை தொடங்க ஆயத்தமானபோது தற்போதுள்ள கழிவு பஞ்சு விலை ஏற்றம் ஓ.இ. மில்லுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஸ்பின்னிங் மில்கள் கழிவு பஞ்சு விலையை டிமாண்ட், சப்ளையை கருத்தில் கொள்ளாமல் காட்டன் வாங்கும் விலையில் 60 சதம் விலைக்கு கழிவு பஞ்சை விற்க முன்வந்தால் மட்டுமே ஓ.இ.மில்களும், விசைத்தறிகளும் தங்கு தடையின்றி தொழிலில் இயங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.