'அரசியல் கலாச்சாரத்தையே மாற்றிய பிரதமர் மோடி' – ஜே.பி.நட்டா புகழாரம்!

“நாட்டின் அரசியல் கலாச்சாரத்தையே பிரதமர் நரேந்திர மோடி மாற்றி உள்ளார்”, என, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் – மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாஜக தீவிர தேர்தல் பிரசாரத்தில் தற்போதே ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் தாவங்கரே என்ற இடத்தில் பாஜக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அக்கட்சி தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிறது. பாஜக ஆட்சியின் சாதனையை (ரிப்போர்ட் கார்டு) எடுத்து சொல்லி மக்களின் ஆதரவை பெற வேண்டும். பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோரது சாதனைகளை எடுத்து சொல்லி மக்களின் ஆதரவை பெற வேண்டும்.

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகியுள்ளது. நாம் மக்களுக்கு வாக்குறுதி அளிக்காத சில திட்டங்களையும் அமல்படுத்தி உள்ளோம். களத்தில் பணியாற்றும் நிர்வாகிகளை சந்திக்க இங்கு வந்துள்ளேன். சட்டசபை தேர்தலுக்கு நாம் தயாராவதால் கர்நாடகம் முழுவதும் நான் பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க முடிவு செய்துள்ளேன்.

சாதி ரீதியிலான விஷயங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். உணவுகளை பரிமாறி உண்டு ஒற்றுமை குறித்த செய்தியை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலை செய்கிறது. சாதி அடிப்படையில் மக்களை அக்கட்சி பிரிக்கிறது. சாதி அரசியல், குடும்ப அரசியல் மற்றும் ஒரு தரப்பினரை ஈர்க்கும் அரசியலை காங்கிரஸ் செய்கிறது. காங்கிரசின் பெயர் ஊழல், கமிஷன், சாதியவாதம் ஆகும்.

பிரதமா் மோடி ஆட்சி அமைந்த பிறகு சாதி, குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம். நாட்டில் அரசியல் கலாசாரம் முற்றிலும் மாறியுள்ளது. நமது பூத் குழுக்கள் பலவீனமாக இருக்க கூடாது. சாதி, மதம், வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினருக்கும் இந்த குழுவில் இடம் அளிக்க வேண்டும். அனைவரையும் பாஜகவின் சின்னத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். இதற்காக நாம் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

தலித் மக்கள் நமது கட்சிக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொருளாதார பலமிக்க நாடுகளான அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் கொரோனா பரவல் மற்றும் உக்ரைன் போரால் நிதி நெருக்கடியில் உள்ளன. பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் இந்தியா பலமிக்க, உறுதியான பொருளாதார நாடாக திகழ்கிறது. நமது நாடு தற்போது உலகின் 5-வது பொருளாதார பலமிக்க நாடாக மாறியுள்ளது.

முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை நாயுடன் ஒப்பிட்டு சித்தராமையா பேசியுள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. நாட்டின் கூட்டாட்சி தத்துவம் பலம் அடைந்து வருகிறது. கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் இங்கு சண்டை போட்டு கொள்கிறார்கள். மேலிட தலைவர்களை சந்திக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை.

இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.