Alanganallur Jallikattu 2023 : அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைப்பார் என்று அதன் மூகூர்த்தகால் நடும்விழாவில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Alanganallur Jallikattu 2023 : தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையொட்டி நடத்தப்படும் பண்பாடு சார்ந்த விளையாட்டு ஜல்லிக்கட்டு. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழகம் நெடுகிலும் நடத்தப்பட்ட கடும் போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டது.
இருப்பினும், ஜல்லிக்கட்டை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும், அதனை மாநில அரசு முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தொடர்ந்து, பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையிலும், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் இன்று முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி,”மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் வழங்கப்படும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு பரிசாக வழங்கப்படும்.
காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைப்பார்” என தெரிவித்தார்.