கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் அடுத்த கம்பியம் பேட்டையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தனது வீட்டின் மின் இணைப்பின் பெயரை மாற்ற வேண்டுமென திருப்பாதிரிப்புலியூர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் உதவி பொறியாளர் சசிகுமாரை அணுகியுள்ளார். மின் இணைப்பின் பெயர் மாற்ற சசிகுமார் ரூ.10,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து செல்வகுமார் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வகுமாரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
அதன் அடிப்படையில் செல்வகுமார் இன்று காலை உதவி மின் பொறியாளர் சசிகுமாரிடம் ரூ.8,000 லஞ்சம் கொடுத்துள்ளார்.
அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சசிகுமாரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உதவி பொறியாளர் சசிகுமாரிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.