டெல்லி: தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பினரும் இன்றுடன் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என்று நேற்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இன்று 3-வது நாளாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
அப்போது நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எச்.ராய் ஆகியோர் முன் ஆஜரான ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமார்; தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிகாரம் இல்லை. 5 ஆண்டுக்கு என ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்த பின் பொதுக்குழு கூட்ட அதிகாரம் இல்லை. எம்ஜிஆர் மறைவுக்கு பின் தற்போதைய நிலை போலவே அன்றும் அதிமுக பிளவை சந்தித்தது. கட்சியின் நிர்வாகத்தை ஜெயலலிதா கையில் எடுத்த பின் சட்ட விதிகள் படி அதிமுக தொடர்ச்சியாக செயல்படுகிறது எனவும் வாதிட்டார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக கட்சி விதிகளை தமிழில் படிக்க நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
இதனை தொடர்ந்து இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரம் கட்சி விதிகளை தமிழில் வாசித்தார். கோரிக்கை கடிதம் வந்த பிறகு 30 நாட்களுக்குள் கூட்டம் நடைபெற வேண்டும். மேற்படி அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் கூட்டம் நடைபெற வேண்டும். மேற்படி மற்றும் கூட்டம் என்றால் ஆங்கிலத்தில் என்ன என்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கேள்வி எழுப்பினார். கட்சி விதிகளை மேற்கோள் காட்டி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள, பொதுக்குழு கூட்டம் தொடர்பான முக்கிய வார்த்தைகளை உரிய மொழிப்பெயர்ப்புடன் வழங்க நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் ஒருதலைப்பட்சமான முடிவால் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லாமல் போகும் என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. கட்சியில் முடிவெடுக்க முட்டுக்கட்டை ஏற்பட்டதால் தேர்தல் ஆணையத்தை நாடினோம் இணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட முடியாது என ஜூன் 28ல் தேர்தல் ஆணையத்துக்கு பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும் ஓபிஎஸ் தரப்பினர் வாதிட்டனர்.