நெல்லை: நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் பொங்கல் திருநாளை மாணவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை மாணவர்கள் விமர்சியாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டும் இந்த பண்டிகையை கொண்டாடும் விதமாக மாணவர்களுக்கு கடந்த 2 நாட்களாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்று கரும்பு, காய்கறிகளை படைத்து, மண்பானையில் பாரம்பரிய முறைப்படி மாணவிகள் பொங்கலிட்டனர்.
இதில் மாணவிகள் பட்டு சேலை அணிந்தும், மாணவர்கள் வேஷ்டி சட்டை அணிந்தும் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன், சக மாணவர்களுடன் இணைந்து நடனமாடினர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. பாரம்பரிய மிக்க இந்த பண்டிகையின் பெருமையை எதிர்கால தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் கல்லூரிகளில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.