'மோடி, அமித் ஷா தமிழகத்தில் போட்டியிடணும்' – அர்ஜூன் சம்பத் விருப்பம்!

“தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறாமல் இருக்க வேண்டுமென்று சொன்னால் நரேந்திர மோடி, அமித் ஷா தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்,” என, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்து உள்ளார்.

கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு இன்று வருகைப்புரிந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால், தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறாமல் இருக்க வேண்டுமென்று சொன்னால் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும். சென்ற முறை காசியில் நரேந்திர மோடி போட்டியிட்டார். இந்தியாவில் காசி, ராமேஸ்வரம் இவ்விரண்டு தான் முக்கியம். ஆகவே இம்முறை தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும்.

அதே போல் மத்திய உள்துறை அமைச்சர் உள்ள அமித் ஷா கோயம்புத்தூரில் போட்டியிட வேண்டும். ஏனென்றால் கோயம்புத்தூர், தமிழ்நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களுக்கு நேரடியாக விசிக ஆதரவு அளித்து வருகின்றது. ஆகையால் அமித் ஷாவும், நரேந்திர மோடியும் தமிழகத்தில் போட்டியிட வேண்டும்.

நரேந்திர மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்கின்ற கட்சி தான் தமிழகத்தில் வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக – பிஜேபி கூட்டணி வலிமையாக உள்ளது. அந்த கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என திமுக ஊடகங்கள் சதி செய்கின்றன. தற்போது எடப்பாடி பழனிசாமி தான் தமிழகத்தில் தலைமை பொறுப்பில் உள்ளார். இந்த திராவிட இயக்கங்களின் ஆட்சியிலேயே கடந்த முறை எடப்பாடி கொடுத்த ஆட்சி தான் சிறந்த ஆட்சி.

எடப்பாடி ஆட்சிக் காலத்தில் மின்சாரம், சட்டம் – ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் இல்லை. திராவிட இயக்கங்களின் முதலமைச்சர்களிலேயே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி, அண்ணா ஆகியோரை விட சிறந்த முதலமைச்சர் எடப்பாடி தான். அவர் அற்புதமான ஆட்சியை கொடுத்திருக்கிறார். வெயிலின் அருமை நிழலில் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்து 17 மாதங்கள் ஆகின்றது.

பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். பி. ஆர்.பாண்டியன் கோரிக்கை மனு

திமுகவின் கொடுங்கோல் ஆட்சியாக தான் இதனை மக்கள் பார்க்கின்றனர். வள்ளலார் சொல்லுவதை போல் கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக என்பதாக தான் உள்ளது. இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு நிச்சயமாக 2024 தேர்தல் பதிலளிக்கும். புதுச்சேரி உட்பட தமிழகத்தில் 40 இடங்களிலும் அதிமுக பிஜேபி கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் திட்டமிட்டு பிஜேபி – இந்து மக்கள் கட்சி நடத்துகின்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திமுகவினால் தூண்டி விடப்பட்ட யூடியூபர்கள் வேண்டுமென்றே பிரச்னை செய்கின்றனர். அவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.