ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியானதை அடுத்து, பஞ்சாப் மாநில அமைச்சர் பவுஜா சிங் சராரி ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 90-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக பகவந்த் மான் பதவி ஏற்றார். டெல்லி மாடலை அடிப்படையாக கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் தோட்டக் கலைத் துறை அமைச்சராக இருந்த பவுஜா சிங் சராரி, 62, அமைச்சர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பகவந்த் மானுக்கு அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தனிப்பட்ட காரணங்களுக்காக அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார். பவுஜா சிங் சராரியின் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் பகவந்த் மான் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒப்பந்ததாரர்களை மிரட்டி பவுஜா சிங் சராரி பணம் கேட்கும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், பவுஜா சிங் சராரி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தின.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பவுஜா சிங் சராரி தெரிவித்துள்ளார். இதற்கிடையே பஞ்சாப் மாநில அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும், புதிய முகங்கள் பலருக்கு, அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.