'தமிழ்நாடு' பெயரில் இவர்களுக்கு என்ன பிரச்னை…? – ஆளுநர் மீது அமைச்சர் அட்டாக்!

Tamilnadu Name Issue : சென்னை அடையாறில் உள்ள தனியார் விடுதியில் தனியார் அமைப்பு நடத்திய கல்வி தலைமைத்துவம் குறித்த நிர்வாக கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று கலந்துகொண்டு உரையாற்றினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”முதலமைச்சர் தலைமையில் திமுக அரசாங்கம் அமைந்த பிறகு ஒன்றரை ஆண்டுகளில் இதுபோல பல்வேறு கலந்தாய்வு கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இதுபோன்று கலந்தாய்வு கூட்டங்கள் நடத்துவது  அரசு நல்ல கொள்கைகளை வகுப்பதற்கு ஏதுவாக உள்ளது.

மாற்றான் தாய் மனப்பான்மை

இனி வரும் காலகட்டங்களில் என்னென்ன தொழில்நுட்பங்கள் தேவைப்படும் என்பதை ஐ.டி இண்டஸ்ட்ரியுடன் இணைந்து கண்டுபிடித்து அதற்கான பயிற்சிகளை வழங்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதே போல பன்னாட்டு நிறுவனங்களோடும் இணைந்து தொழில்நுட்பம்  குறித்த பயிற்சிகளை தமிழ்நாடு மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். இது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவர்களின் திறனை மேம்படுத்தக்கூடிய வாய்ப்பாக நிச்சயம் அமையும். 

திறன் இடைவெளியை போக்குவதற்கு இந்த ஆண்டு கலை கல்லூரிகளிலும் அரசு சார்ந்த பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கூடுதல் தொழில்நுட்ப பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குவதோடு ஆன்லைனிலும் அனைத்து மாணவர்களுக்கு தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறோம் எனவும் இந்த ஆண்டு தமிழகத்தின் கல்வி வளர்ச்சி மிக அதிக அளவு உள்ளது.

என்றைக்குமே தமிழர்களும் திராவிட இயக்கங்களும் இந்தியா என்ற ஒன்றுபட்ட நாட்டிலிருந்து பிரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டதும் இல்லை, அவ்வாறு ஒரு திட்டமும் இல்லை. இந்தியா ஒரு கூட்டாட்சி முறையை கடைப்பிடிக்கிறது. தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையோடும் ஒருதலை பட்சமாகவும் நடத்துகிறார்கள். 

இவர்களுக்கு என்ன பிரச்சனை ?

இன்று 111 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சமூகப் பொருளாதார அளவீடுகளை வைத்து பார்க்கும் பொழுது சென்னை முதல் இடத்தில் உள்ளது.  இதனை ஆளுநர் பாராட்ட வேண்டும். திராவிட  மாடலின் பெருமையை ஆளுநர் பாராட்ட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் கூற வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.

ஆளுநர் பேசுவது அமாண்டமான அரசியல் உள்நோக்கத்தோடு கூடிய செயலாக உள்ளது எனவும் ஆளுநரின் பேச்சில் உள்நோக்கம் இருக்கிறது.  இது எங்கே இருந்து வருகிறது என்று தெரியவில்லை. தமிழ்நாடு என்பது நம்முடைய அடையாளம்.

உண்ணாவிரதம் இருந்து உயிரை நீத்து அண்ணா தலைமையில் சட்டமன்றம் கூடி ஒருமன நிலையில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு என்ற பெயர் இருப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இது இவர்கள் கண்ணை உறுத்துகிறது என்றால் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்.

கங்கை முதல் இலங்கை வரை இருக்கக்கூடிய பறந்து விரிந்த நிலப்பரப்பில் வாழ்ந்த குடிமக்கள் திராவிடர்கள் என்று இன்று உலகத்தில் இருக்கக்கூடிய வரலாற்று ஏடுகள் எல்லாம் கூறுகிறது. அதை ஏன் இவர்கள் மறுக்கிறார்கள். நம்முடைய மாநிலங்கள் என்பது மொழிவாரியாக பிரிக்கப்பட்டது நாம் தமிழ் மொழி பேசுகிறோம் தமிழ்நாடு என்ற பெயர் பெற்றிருக்கிறோம். இதை ஆளுநர் பாராட்ட வேண்டும், குறை கூறக்கூடாது” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.