வேலூர் சத்துவாச்சாரியில், மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே மாநில அளவிலான அமர்வு கைப்பந்துப் போட்டி இன்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சமூகவலைதள பிரபலம் ஜி.பி.முத்து இருவரும் கலந்து கொண்டு இப்போட்டியை குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஜி.பி.முத்து, “என் மனைவியும் மாற்றுத்திறனாளிதான். ஆனால், அவரை ஒருநாளும் நான் மாற்றுத்திறனாளியாக நினைத்ததே கிடையாது. நான் இந்த உயரத்துக்கு வரக் காரணம் என் மனைவிதான்.
வேலைக்குப் போகாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு டிக்டாக் பண்ணுவேன். எதுவுமே செய்ய மாட்டேன். குடும்பத்தையும் பார்க்காமலிருந்தேன். மனைவி கையில் 100 ரூபாய் இருந்தாலும், அதை வைத்து இரண்டு நாள்கள் குடும்பச் செலவை சமாளித்துவிடுவார். கல்யாணத்துக்கு முன், என் மனைவியை நிறையப் பேர் பெண் பார்க்க வந்து பிடிக்கவில்லை என்று கூறிச் சென்றிருக்கிறார்கள்.
எனக்குப் பார்த்த உடனேயே அவரைப் பிடித்துப்போய்விட்டது. ஆனால், என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சம்மதமில்லை. `அவளுக்கு குழந்தை பிறக்காது’ என்றார்கள். நான் பிடிவாதமாக இருந்து அடுத்த 6 மாதங்களில் அவரை திருமணம் செய்து கொண்டேன்.
இன்று எங்களுக்கு 4 பிள்ளைகள். அதில் இருவர் இரட்டையர்கள். என் மனைவி மிகவும் தன்னம்பிக்கையுடையவர். மாதம் ஒருமுறை ஆசிரமம், முதியோர் இல்லங்களுக்குச் சென்று உணவு வழங்கி, நிம்மதியாக வாழ்கிறோம்.
யாரும் தங்களை மாற்றுத்திறனாளியாக நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. நம்மால் சாதிக்க முடியும்’’ என்று நெகிழ்ந்தார்.