பழக்கடையில் சாமர்த்தியமாக கள்ள நோட்டை மாற்ற முயன்று, கையும் களவுமாக சிக்கிய மூதாட்டி!

விருதுநகரில் பழக்கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அகமது நகரைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (40). இவர் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகின்றார். இவரது கடையில் பாண்டி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சிவகாசி வேண்டுராயபுரத்தைச் சேர்ந்த சுப்புத்தாய் (56) என்பவர் இன்று காலை ஆப்பிள் பழம் வாங்கி விட்டு கடையில் இருந்த பாண்டி என்பவரிடம் 500 ரூபாயை கொடுத்து விட்டு மீதி சில்லரை கேட்டுள்ளார்.
image
அப்போது கடையில் இருந்த பாண்டி, ரூபாய் நோட்டை வாங்கி பார்த்து விட்டு சந்தேகமடைந்த அவர், சில்லறை எடுப்பது போல், தன்னிடம் இருந்த வேறு 500 ரூபாய் நோட்டுடன் சுப்புத்தாய் கொடுத்த 500 ரூபாய் நோட்டை ஒப்பிட்டு பார்த்துள்ளார். அப்போது, சுப்புத்தாய் கொடுத்தது கள்ள நோட்டு என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து சுப்புத்தாயிடம் கேட்டபோது அவர் பதட்டமடைந்துள்ளார். இதையடுத்து பழக்கடை உரிமையாளர் பஞ்சவர்ணம், சுப்புத்தாயை அழைத்துச் சென்று பழைய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் இது குறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
image
இதைத் தொடர்ந்து சுப்புத்தாயை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.