மதுரை ஜல்லிக்கட்டு – என்னென்ன கட்டுப்பாடுகள்?… முழு விவரம்

உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் ஆகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து மாடுகளும், மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்வார்கள். இந்தச் சூழலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் , ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பெயர், கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், வயதிற்கான சான்றிதழ், கொரானா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் முதலியவைகளை பதிவேற்றம் செய்திட வேண்டும் . 

மாடுபிடி வீரர்கள் அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்பதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் . ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் . ஒரு மாடுபிடி வீரர் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் அனுமதிக்கப்படவுள்ளனர். அவர்களும் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் . ஜல்லிக்கட்டினை காண வரும் பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்ற சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும்.

அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். ஜல்லிக்கட்டு போட்டிகளை காணவரும் பார்வையாளர்களும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்துத் துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT-PCR Test) என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.