கர்னல்(ஹரியானா): வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்ளவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஹரியாணாவில் நடைபெற்று வரும் நிலையில், கர்னல் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்ராம் ரமேஷ் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: ”ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்த யாத்திரை, அரசியல் யாத்திரை அல்ல. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக தான் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக இந்த யாத்திரையை அவர் மேற்கொள்ளவில்லை. இது காங்கிரஸ் கட்சியின் கொள்கை சார்ந்த யாத்திரை.
ராகுல் காந்திதான் காங்கிரஸின் முதன்மை முகம். அதேநேரத்தில் இது ஒரு தனிநபருக்கான யாத்திரை அல்ல. இந்த யாத்திரையின் மூலம் மூன்று வெற்றிகளை ராகுல் காந்தி ஈட்டி இருக்கிறார். நாட்டில் நிலவும் பொருளாதார சமத்துவமின்மை, சமூகப் பிளவு, அரசியல் எதேச்சதிகாரம் ஆகியவற்றை அவர் அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்த யாத்திரையின் ஒவ்வொரு நாளும் இவை குறித்து அவர் பேசி இருக்கிறார்.
இது தேர்தலுக்கான யாத்திரை என்று கூறி இதனை சிறுமைப்படுத்த வேண்டாம். அதற்கும் மேலான நோக்கங்களைக் கொண்டது இந்த யாத்திரை. காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு இருக்கும் ஆதரவை பெருக்கவும், நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ராகுல் காந்தி இந்த யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். பழிவாங்கும் அரசியல், வெறுப்பு அரசியல், அழிவு அரசியல் ஆகியவற்றை மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மக்கள் அறியும் வகையில் அவர்களின் உள்ளுணர்வுகளை அவர் தட்டி எழுப்பி வருகிறார்” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.