6 அடிக்கு குறைவான கரும்புகளை கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகளிடமிருந்து 6 அடிக்கும் குறைவான கரும்புகளை கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக உழவர்களிடமிருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரும்பு கொள்முதலில் இதுவரை எந்த முறைகேடு புகார்களும் எழவில்லை என்பது மனநிறைவு அளிக்கிறது.

6 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பதால் அதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். இதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. ஆனால், காலமும், சூழலும் இந்த விஷயத்தில் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.

6 அடி உயரத்திற்கும் குறைவான கரும்புகளை தோட்டத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் ஆணையிடுகின்றனர். அவ்வாறு அகற்றப்படும் கரும்புகள் வீணாகி விடும். பொங்கலுக்கு இன்னும் 8 நாட்கள் இருப்பதால் அகற்றப்படும் கரும்புகளை சந்தையிலும் விற்க முடியாது.

கரும்பின் உயரம் சில காரணங்களால் குறைவது இயல்பு. இதில் உழவர்களின் தவறு எதுவும் இல்லை. அதனால் உழவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதனால், 5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு ஆணையிட வேண்டும்” இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.