புதிய தலைமுறை சேனலின் நிருபர் முருகேசனுக்கும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலைக்கும் இடையில் பிரஸ் மீட்டில் நடந்த வாக்குவாதம்தான் கடந்த வாரம் மீடியா மற்றும் அரசியில் ஏரியாவின் ஹாட் டாபிக்.
இந்த விவகாரம் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என இரு தரப்புக்கும் இடையிலான பிரச்சினையாக மாறி இரு தரப்பும் மாறி மாறி விமர்சனங்கள், ட்ரோல் என அக்கப்போர் செய்து வந்தனர்.

அத்தகைய ஒரு விமர்சனமாக பா.ஜ.க ஆதரவாளர்களால் பரப்பப்பட்ட செய்தி ஒன்று டிவி சேனல்களின் செய்தி வாசிப்பாளர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.
அதாவது, ’பிரஸ் மீட்டில் அந்த நிருபர் அண்ணாமலையிடம் வாக்குவாதம் செய்த அதே நாள்தான் கோயம்புத்தூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் செய்தியாளர்கள் சிலர் சந்தித்திருக்கின்றனர். அவர்களுக்கு செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
எனவே திட்டமிட்டு செந்தில் பாலாஜி தரப்பால் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் படியே செய்தியாளர்கள் அண்ணாமலையைக் கோபப்படுத்தி வாக்குவாதம் செய்திருக்கிறார்கள்’ என பா.ஜ.க ஆதரவு வட்டாரங்களில் இருந்து பரப்பப்பட்ட தகவலே இந்தக் கோபத்துக்குக் காரணம்.
தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சங்கத்தினர் சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படமும் இந்தச் செய்தியுடன் சேர்த்து வைரலானது.
இதுகுறித்து தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் தலைவர் பிரபு தாசனிடம் இதுதொடர்பாகப் பேசினோம்.

‘’பிரஸ் மீட்டில் கேள்வி கேட்கிற நிருபர்களுக்கும், தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கிற செய்தி வாசிப்பாளர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பரப்பப்பட்ட விஷமமான செய்தி இது.
செய்தி வாசிப்பாளர் சங்கம் சார்பாக, டிவிக்கு புதிதாகச் செய்தி வாசிக்க வருகிறவர்களுக்கு பயிற்சி தருகிற வகையில் அகாடமி நடத்துகிறோம். சென்னையில் ஏற்கெனவே இந்த அகாடமி இயங்கிட்டு வருகிற சூழல்ல கோயம்புத்தூர்ல இன்னொரு கிளை திறந்தோம். அதைத் திறந்து வைக்க கோயம்புத்தூர் பகுதிக்குப் பொறுப்பு வகிக்கிற அமைச்சர் என்கிற முறையில் செந்தில் பாலாஜியை அழைத்திருந்தோம். அவரும் வந்து திறந்து வைத்தார்.
பொதுவாக திறப்பு விழாக்கள் அமைச்சர்களை வைத்து நடப்பது வழக்கம்தானே. கடந்த ஆட்சியிலும் கூட அமைச்சர் ஜெயக்குமாரை எங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறோம். அதனால இந்த விஷயத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கத் தேவையில்லை. எங்கள் சங்கமுமே அரசியல் சார்பில்லாமத்தான் செயல்பட்டு வருது.
கோயம்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் எங்கள் சங்கத்திலுள்ள பலரால் கலந்துக்க முடியவில்லை. அதனால் சென்னையில் அமைச்சரை நேரில் சந்தித்து கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்து ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். அந்த ஃபோட்டோவை வச்சுதான் அவதூறு பரப்பியிருக்காங்க சிலர்.
அதுவும் அமைச்சர்கிட்ட இருந்து ரூ.50 லட்சம் வாங்கினோம் என்பது அப்பட்டமான அவதூறு. செய்தி வாசிப்பாளர்கள் குறித்து மக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை உருவாக்க நினைக்கிற ஒரு சூழ்ச்சியாகத்தான் இதை நாங்கள் பார்க்கிறோம்.

எங்களைப் பத்தி அவதூறு பரப்பியதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். தனி நபர்கள் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்பினால்கூட கடந்து போயிடலாம். ஆனா பா.ஜ.க. தொடர்புடைய ஒரே நாடு உள்ளிட்ட தளங்களில் இந்தத் தகவலைப் பார்க்க முடிந்ததுதான் வேதனையாக இருந்தது.
’ரிப்போர்ட்டருக்கும் நியூஸ் ரீடருக்கும் வித்தியாசம் கூடத் தெரியாதபடியா உங்க அரசியல் அறிவு இருக்கும்’ என கேட்கத் தோன்றுகிறது.
தொடர்ந்து இதுபோல அவதூறுகளைப் பரப்புகிறவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் எங்கள் நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு செய்வோம்’’ என்கிறார்