புதுடெல்லி: ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் சட்ட அமைச்சர் ரகுபதி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர். குடியரசு தலைவரை சந்தித்த தமிழ்நாடு பிரதிநிதிகள் முதலமைச்சரின் கடிதத்தை வழங்கினர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 9ம் தேதி உரையாற்றும்போது, தமிழ்நாடு என்று சொல்லாமல், தமிழகம் என்று குறிப்பிட்டார். அதோடு தமிழ்நாட்டுக்காகவும், அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பெயரையும் சொல்லாமல், தன்னிச்சையாக சில பகுதிகளை சேர்த்து உரை நிகழ்த்தினார்.
அப்போது சட்டப்பேரவையில் ஆளுநர் இருக்கும்போதே, இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, அரசு தயாரித்த அறிக்கை மட்டுமே பேரவையில் இடம்பெறும் என்று தீர்மானம் கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னரே வெளிநடப்பு செய்தார். தமிழ்நாட்டுக்கு தமிழகம் என பெயர் மாற்றம் தேவை. தமிழ்நாடு சட்டசபையில் தன்னிச்சையாக உரை வாசித்தது உள்ளிட்டவைகளால் தமிழ்நாடு முழுவதும் ஆளுநர் ரவிக்கு எதிராக போராட்டங்களில் மாணவ அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர் மூன்றாவது நாளாவதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் சட்ட அமைச்சர் ரகுபதி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர். குடியரசு தலைவரை சந்தித்த தமிழ்நாடு பிரதிநிதிகள் முதலமைச்சரின் கடிதத்தை வழங்கினர். அதில், அரசியல் சாசனத்தை மீறி செயல்படும் ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையை திருத்தி சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி படித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும், உரையில் இருந்து கருத்துக்களை விட்டுவிட்டு, இல்லாத வரிகளை சேர்த்தும் ஆளுநர் படித்தது மரபு மீறிய செயல் என அந்த கடிதத்தில் குற்றச்சாட்டப்பட்டிருந்தது.