'காங்கிரசுக்கு பொறுப்பே இல்லை; வெறும் வாய் தான்..!' – முதல்வர் பசவராஜ் பொம்மை கலாய்!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என, கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை விமர்சனம் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சுமார் 4 மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் பணிகளில், அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

பாஜகவை பொறுத்தவரை, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. அவர் மீது பல்வேறு விவகாரங்களில் அதிருப்தி இருந்தும், பாஜக டெல்லி மேலிடம் அவருக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது.

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக, அவர் படு தீவிரமாக கட்சிப் பணியாற்றி வருகிறார். இதே போல், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமியும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு உள்ளார்.

இதற்கிடையே நேற்று, “கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்,” என, அக்கட்சி மாநில தலைவர் டி.கே.சிவகுமார் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் வாக்குறுதி, அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் எவ்வளவு குறைவாக நடந்து கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு அவர்களது பொறுப்பற்றத் தன்மையையும், பகுத்தறிவின்மையையும் காட்டுகிறது. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள் என்பது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது. அதனால் தான் இது போன்ற வாக்குறுதியை அளித்துள்ளனர். இது போன்ற பல அறிவுப்புகளை காங்கிரஸ் கட்சியிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றி பெறலாம் என காங்கிரஸ் நினைக்கிறது. இது போன்ற பொறுப்பற்ற வாக்குறுதிகளை அளிப்பவர்களால் தேர்தலில் வெல்ல முடியாது. இதே 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பேன். ஏனென்றால், அவர் அரசியலுக்கு புதியவர். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் கூட தடையற்ற மின்சாரம் தர முடியாத காங்கிரஸ் கட்சியால் எப்படி இலவச மின்சாரம் தர முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.