கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் கப்பியறை அருகே உள்ள புதுக்காடுவெட்டிவிளையை சோ்ந்தவர் சேவியர் பாபு (57). நில புரோக்கராக தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய 2 மகள்களும் திருமணமாகி குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். சேவியர் பாபு நாகர்கோவிலை அடுத்த பள்ளவிளை பகுதியில் வசித்து வந்தார். நிலம் சம்பந்தமான பணிகளுக்காக சேவியர் பாபு அடிக்கடி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த திங்கட்கிழமை மதியம் தனது நண்பரான நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த ஸொமோட்டோ உணவு விநியோக நிறுவனத்தின் டெலிவரிபாய் ஒருவர் முந்திச்செல்ல முயலும்போது, திடீரென அவர்கள் மீது மோதுவதுபோல் வந்துள்ளார். இதனால் அவரை சேவியர் பாபு மற்றும் செல்வராஜ் ஆகியோர் கண்டித்தனர். இதனால் டெலிவரிபாய்க்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சேவியர் பாபுவும், செல்வராஜும் தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அவர்களை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற உணவு விநியோக நிறுவன ஊழியர் அவர்களிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே அந்த ஊழியர் திடீரென உணவு டெலிவரி செய்யும் பேக்கில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவர்கள் 2 பேரையும் சரமாரியாக குத்தியுள்ளார்.
சேவியர் பாபுவுக்கு இடது மார்புக்கு அருகிலும், முதுகு பகுதியிலும் பலமாக கத்திக்குத்து காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். செல்வராஜிக்கு வயிறு, தோள்பட்டை, முதுகு ஆகிய பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது. டெலிவரிபாய் தான் கொண்டு வந்த பையை அங்கேயே போட்டுவிட்டு, பைக்கில் தப்பிச் சென்று விட்டார். படுகாயமடைந்த செல்வராஜை அருகில் இருந்தவர்கள் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டார் போலீஸார் சேவியர் பாபுவின் உடலைக் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடினர். கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தனியார் உணவு நிறுவன ஊழியருக்கும், சேவியர் பாபு- செல்வராஜ் ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அந்த ஊழியரை சேவியர் பாபு ஹெல்மெட்டால் தாக்குவது போன்ற காட்சியும், பின்னர் அந்த ஊழியர் சேவியர் பாபு மற்றும் செல்வராஜ் ஆகியோரை கத்தியால் குத்துவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. கொலை குற்றவாளி நாகர்கோவில் நேசமணிநகர் பெஞ்சமின் தெருவைச் சேர்ந்த சுபின் என்பதும், அவர் வள்ளியூரில் வசித்து வந்ததும் தெரியவந்தது. கொலை நடந்ததும் சுபின் தனது மோட்டார் சைக்கிளில் அஞ்சுகிராமம் வழியாக தூத்துக்குடி மாவட்டம் ஏரலுக்கு தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து தனிப்படை போலீஸார் ஏரலுக்கு சென்று சுபினை கைது செய்தனர்.
சுபின் மீது கோவை, ஆசாரிபள்ளம், கோட்டார், வடசேரி, நேசமணிநகர், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி வழக்கு, போக்சோ வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. அவர் ரெளடி பட்டியலிலும் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தன்மீது பல வழக்குகள் உள்ளதால் பாதுகாப்புக்காக கத்தி வைத்திருந்ததாகவும், பெண்களும், வாகன ஒட்டிகளும் அதிகமா இருக்கும் இடத்தில்வைத்து சேவியர்பாபு தன்னை ஹெல்மெட்டால் தாக்கியதால் அவமானம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர்களை கத்தியால் குத்தியதாகவும் சுபின் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆன்லைன் உணவு நிறுவனங்களில் உள்ள டெலிவரி செய்பவர்களின் வழக்கு உள்ளிட்ட விபரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.