புதுடெல்லி: சீனாவை ஒட்டிய எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாக இருப்பதாக ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
ராணுவ தின விழாவை முன்னிட்டு புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ”சீனாவை ஒட்டிய எல்லையில் அந்நாடு தனது படைவீரர்களின் எண்ணிக்கையை சற்று அதிகரித்துள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாகவே இருக்கிறது. எனினும், நிலைமை கட்டுப்பாட்டிலேயே உள்ளது. சீனா உடனான 7 எல்லை பிரச்சினைகளில் 5 பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்கிறோம். எனினும், எத்தகைய நிலைமையையும் எதிர்கொள்வதற்கு ஏற்ப போதுமான படைகளை நாம் எல்லையில் நிறுத்தி உள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகளில் சீனாவை ஒட்டிய வட எல்லையில் நாம் நமது கட்டமைப்புகளை வலுப்படுத்தி உள்ளோம். 2,100 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைத்துள்ளோம். 7,450 மீட்டர் தூதரத்திற்கு மேம்பாலங்கள் அமைத்துள்ளோம். அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லையில் தற்போதும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. லடாக் செக்டரில் 500 பீரங்கிகள், 400 துப்பாக்கி இயந்திரங்களுடன் 55 ஆயிரம் படைவீரர்கள் கூடுதலாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை நாம் அந்நாட்டுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறோம். ஆனால், பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாகவும் பயங்கரவாத கட்டமைப்புகளுக்கு ஆதரவாகவும் பாகிஸ்தான் செயல்படுவதால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது. வட கிழக்கு மாநிலங்கள் பலவற்றில் தற்போது அமைதி திரும்பி இருக்கிறது” என்று மனோஜ் பாண்டே தெரிவித்தார்.