துணிவு Vs வாரிசு முதல் நாள் வசூல் நிலவரம் – தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபீஸில் இவர்தான் டாப்!

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் நேற்று ஒரே நாளில் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் வழக்கம்போல் அஜித்தின் படம்தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விஜய் திரைப்படம் டாப்பில் உள்ளது.

தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். கடந்த 2014-ம் ஆண்டு பொங்கலுக்குப் பிறகு, இவர்கள் இருவரின் படங்களும் நேரடியாக மோதாமல் இருந்தன. இந்நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுப் பொங்கலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் அஜித்தின் ‘துணிவு’ நள்ளிரவு 1 மணிக்கும், விஜய்யின் ‘வாரிசு’ அதிகாலை 4 மணிக்கும் வெளியானது. இதில் வழக்கம்போல் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டியுள்ளது.

துணிவு:

அதன்படி, தமிழ்நாட்டில் ‘துணிவு’ திரைப்படம் 575 ஸ்கிரீன்களில் வெளியான நிலையில், ரூ. 21.2 கோடி வசூலித்துள்ளது. இந்திய அளவில் ரூ. 30.16 கோடியும், உலக அளவில் ரூ. 39.01 கோடி வசூலித்துள்ளது. கேரளாவில் ரூ. 1.42 கோடியும், ஆந்திரா மற்றும தெலங்கானாவில் ரூ.2.18 கோடியும், கர்நாடகாவில் ரூ. 4.81 கோடியும், மற்ற மாநிலங்களில் 55 லட்சம் ரூபாயும் வசூலை ஈட்டியுள்ளது.

image

மலேசியாவில் 109 இடங்களில் வெளியான நிலையில்,ரூ. 1.45 கோடியும், அமெரிக்காவில் ரூ.3.06 கோடியும், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ.2.17 கோடியும், சிங்கப்பூரில் ரூ. 1.47 கோடியும், மற்ற நாடுகளில் சேர்த்து ரூ.8.85 கோடியும் பெற்றுள்ளது.

வாரிசு:

அதேநேரத்தில் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ்நாட்டில் 525 ஸ்கிரீன்களில் வெளியான நிலையில், இங்கு மட்டும் ரூ. 19.43 கோடி வசூலித்துள்ளது. இந்திய அளவில் ரூ. 31.47 கோடியும், உலக அளவில் ரூ. 46.32 கோடியும் வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளது. கேரளாவில் ரூ.4.55 கோடியும், கர்நாடகாவில் ரூ. 5.62 கோடியும் வசூலை ஈட்டியுள்ளது.

image

மலேசியாவில் 115 இடங்களில் ‘வாரிசு’ வெளியிடப்பட்ட நிலையில், ரூ.1.65 கோடியும், அமெரிக்காவில் ரூ. 2.4 கோடியும், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ. 2.4 கோடியும், சிங்கப்பூரில் 94 லட்ச ரூபாயும் வசூலித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.