பேரவை மோதல்: "ஆளுநர் விவகாரத்தில் I Will see என்றார் குடியரசு தலைவர்" – டி.ஆர் பாலு

தமிழ்நாடு ஆளுநர் விவகாரம், நீட் மசோதா ஒப்புதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் தமிழ்நாடு பிரதிநிதிகள் சட்ட அமைச்சர் ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, பி.வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனுவையும், தமிழ்நாடு முதல்வர் எழுதிய கடிதத்தை சீலிட்ட கவரில் வழங்கினர்.
சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விரிவாக எடுத்துரைத்தனர். குறிப்பாக, “கடந்த 9 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் நடந்துகொண்ட விதம் சட்ட விரோதமானது. சட்டப்பேரவை மாண்பை இழிவுபடுத்தியும், தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும், ஆளுநர் எழுந்துசென்றார்” என்று தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு விரிவாக எடுத்துரைத்துள்ளது.
image
பின்னர் டெல்லி ரைசினா சாலையில் உள்ள டி.ஆர்.பாலுவின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டி.ஆர்.பாலு, “முதலமைச்சர் கடிதத்தை சட்ட அமைச்சர் ரகுபதி குடியரசு தலைவரிடம் வழங்கினார். சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் நடந்துகொண்ட விதம் அரசியலமைப்புக்கு எதிரானது. சட்டசபையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் மிக வருந்தத்தக்கது.
தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்னால் ஆளுநர் சட்டப்பேரவையில் வெளியே சென்றது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல். தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்து பின்னர் ஆளுநரும் ஒப்புதல் அளித்த அந்த உரையில் பலவற்றை தவிர்த்தும், சேர்க்கவும் செய்துள்ளார். ஆளுநர் அரசியல் சாசனத்துக்கு எதிராகவும், சட்டப்பேரவை விதிமுறைகளுக்கு மாறாகவும் நடந்துகொண்டுள்ளார் என்பதை எடுத்துரைத்தோம்.
image
குடியரசுத் தலைவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்தைப் படித்துப் பார்த்த பின்னர் ஆளுநரின் அரசியல் சாசன விதிமீறல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இந்த விவகாரம் அனைத்தையும் குடியரசு தலைவரிடம் எடுத்துரைத்தோம். அனைத்தையும் கவனமுடன் கேட்டு பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக (I Will see என) குடியரசு தலைவர் கூறியுள்ளார்” என தெரிவித்தார்.
பின்னர் செய்து சமுத்திர திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாலு, “மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் வழங்கிய பதில் அடிப்படையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து வலியுறுத்தப்படும். திட்டம் நிறைவடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்” என்றார். மேலும் “குடியரசு தலைவரை சந்திப்பதே நோக்கம். ஆதலால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஒருவேளை குடியரசுத் தலைவர் நேரம் ஒதுக்காமல் இருந்திருந்தால் மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க முயற்சி செய்திருப்போம்” என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.