பொங்கல் பண்டிகைக்கு களைகட்டும் டெல்லி தமிழ்நாடு இல்லம்… என்னென்ன நிகழ்ச்சிகள்?

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசின் சார்பாக புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் 14.01.2023, 15.01.2023 ஆகிய தினங்களில் சிறப்பாக நடைபெறவுள்ளன.

பொங்கல் விழாவினையொட்டி தமிழ்நாடு இல்லம் முதன்மை உள்ளுறை ஆணையர் திரு.ஆஷிஷ் சாட்டர்ஜி, இ.ஆ.ப., தலைமையில் மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு.ஏ.கே.எஸ்.விஜயன் அவர்கள் 14.01.2023 அன்று காலை 11.00 மணியளவில் கோலப்போட்டியினை பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் தொடங்கி வைக்கிறார்.

அதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் போகி பண்டிகை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பொங்கல் விழாவையொட்டி 15.01.2023 அன்று காலை 11.00 மணிக்கு வைகை தமிழ்நாடு இல்லத்தில் கூட்டாக பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாட உள்ளனர். அதன் பிறகு பொங்கல் விழா தொடக்க நிகழ்ச்சி மாலை 3.30 மணிக்கு வைகை தமிழ்நாடு இல்லத்தில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கப்படவுள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய பரதநாட்டியம், நாட்டுப்புற கலைஞர்களின் நையாண்டி மேளம், தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் விழாவையொட்டி பல்வேறு பிரிவின்கீழ் ஓவிய போட்டி, கபடி போட்டி, எரிபந்து, சக்கர நாற்காலி, கோ-கோ மற்றும் உறியடி போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பொங்கல் விழாவில் மொத்தம் 199 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன

.

பொங்கல் விழாவையொட்டி சுற்றுலாத் துறை, ஆவின், பூம்புகார், கோ-ஆப்டெக்ஸ், டாம்ப்கால், இன்ட்கோசர்வ், மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் கண்காட்சி மற்றும் புத்தக கண்காட்சி விற்பனையும் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் தமிழ்நாட்டை சார்ந்த பல்வேறு உணவகங்களும் பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செயல்படவுள்ளன. பொதுமக்கள் அனைவரும் பொங்கல் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.