Budget 2023 Income Expectations: எதிர்வரும் 2023-2024 நிதியாண்டிற்கான வரவு செலவு அறிக்கையை இன்னும் சில நாட்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அனைவரின் பார்வையும் இந்திய பட்ஜெட்டின் மேல் உள்ளது.
இந்தியாவின் வரவு செலவு கணக்கு
வரவு செலவு கணக்கு, பட்ஜெட் என்ற வார்த்தைகள் நாம் அடிக்கடி கேட்பது, ஒருவரின் வருமானம் மற்றும் செலவை கணக்கிடும் முறை என்று சுலபமாக சொல்லிவிடலாம். தனி மனிதர்களுக்கும் ஒரு நாட்டிற்குமான வரவு-செலவு கணக்கு, எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றத்தையும் தருவதாகவே இருக்கும். சரி, இந்தியா எப்படி சம்பாதிக்கிறது? அதன் பின்னணியில் உள்ள கணிதம் என்ன? தெரிந்துக் கொள்வோம்.
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்கிறார். உலகப் பொருளாதாரம் மந்தநிலையின் சாத்தியக்கூறுடன் போராடி வரும் நிலையில், அனைவரின் பார்வையும் இந்த பட்ஜெட் மீதுதான் உள்ளது.
பட்ஜெட் என்பது, சாமானியர் முதல் பெரிய தொழில் அல்லது சிறு-நடுத்தர வணிக உரிமையாளர்கள் வரை அனைவருக்கும் ஆர்வத்தைக் கொடுக்கும் விஷயம். இந்திய அரசாங்கத்தின் முதன்மையான வருமானம் எது தெரியுமா? அரசாங்கத்தின் வருவாயின் அமைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது…
நாட்டின் வருமானம்
ஒரு நாட்டில் வசிக்கும் மக்களின் அனைத்துவிதமான வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் வருமானம் கணக்கிடப்படுதலை, நாட்டின் வருமானம் கணக்கிடுதல் எனலாம். இதில் நாட்டு வருமானம், நிகர வருமானம். தலா வருமானம் என பல வருமான முறைகள் உள்ளன. ஒரு நாட்டின் வருமானத்தை எப்படி கணக்கிடுவது?
அரசாங்கத்தின் முதன்மையான வருமானம்
FY22 பட்ஜெட் ஆவணத்தின் அடிப்படையில், இந்தியாவின் வருவாயின் பெரும்பகுதி கடன் வாங்குதல், வரி வருவாய், (வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி (GST), கார்ப்பரேட் வரி) ஆகியவற்றிலிருந்து கிடைக்கிறது.
உதாரணத்திற்கு இந்தியாவின் வருவாயை ஒரு ரூபாய் என்று வைத்துக் கொண்டால், அது எப்படி கிடைக்கிறது என்பதற்கான கணக்கீடு சுலபமாக புரியவைக்கும்.
கடன் மற்றும் பிற பொறுப்புகள் – 35 பைசா
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) – 16 பைசா
கார்ப்பரேட் வரி – 15 பைசா
வருமான வரி – 15 பைசா
யூனியன் கலால் வரி – 7 பைசா
கஸ்டம் வரி – 5 பைசா
வரி அல்லாத வருவாய் – 5 பைசா
கடன் அல்லாத மூலதன ரசீது – 2 பைசா
நிதிப் பற்றாக்குறை என்றால் என்ன?
நிதிப்பற்றாக்குறை என்பது அரசின் மொத்த வருவாய்க்கும் மொத்த செலவினத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம், அதாவது வருமானத்தை விட செலவு அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.
நடப்பு நிதியாண்டில் (FY23) அரசின் மொத்த பட்ஜெட் ரூ.3944157 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப அரசு பட்ஜெட்டை ஒதுக்கும். ஒதுக்கப்பட்ட தொகை மதிப்பிடப்பட்ட தொகையை விட அதிகமாக இருந்தால், அரசாங்கம் கடனைப் பெறுகிறது. அந்தக் கடனுக்கான வட்டியும் கட்டப்பட வேண்டும்.