திருமாவளவனுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு: தாமதத்திற்கு என்ன காரணம்?

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை சந்திக்க கட்சி அலுவக்கத்திற்கு சென்ற தன்னை கட்சி அலுவலகத்தில் இருந்த வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் தாக்கியதாக, சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவர் நந்தம்பாக்கம் போலீசில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி புகார் அளித்தார்.

அதில், தன்னையும், தனது மனைவி குழந்தைகளை தாக்கிய அவர்கள், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை பறித்துச் சென்றதாகவும், இந்த தாக்குதலுக்கு திருமாவளவன் தான் காரணம் எனவும் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வீரப்பன், திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை முயற்சி, திருட்டு, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டது. பின்னர் இந்த வழக்கு வேளச்சேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

அரசியல் அழுத்தம் காரணமாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், கடந்த 11 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வேதா அருண் நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், முதலில் நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு பின், வேளச்சேரி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டதால் வழக்கு சம்மந்தமான ஆவணங்களை கண்டுபிடிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களையும், வழக்கின் விசாரணை நிலை குறித்தும் அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.