பொங்கல் திருநாளில் தேர்வு நடத்த எதிர்ப்பு: எஸ்பிஐ பொது மேலாளர் அறையில் சு.வெங்கடேசன் எம்.பி போராட்டம்

சென்னை: பொங்கலன்று தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள எஸ்பிஐ வட்டாரத் தலைமையகத்தின் பொது மேலாளர் அறையில் எம்பி சு.வெங்கடேசன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு திருமாவளவன், தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளார்க் பணியிடங்களுக்கு நுழைவுத் தேர்வை பொங்கல் அன்று நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள. மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்து, தேர்வு நாளை மாற்றக் கோரி வங்கி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். ஆனாலும் தேர்வு நாளை மாற்றப்படவில்லை.

இதனை கண்டித்தும், தேர்வு நாளை மாற்றக்கோரி இன்று (ஜன.13) பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டாரத் தலைமையகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக சென்று முற்றுகையிட்டனர். அப்போது சு.வெங்கடேசன் பேசுகையில், “தேர்வு அட்டவணையை வங்கி நிர்வாகம் 20 நாட்களுக்கு முன்பு வெளிட்ட உடனே, நிதியமைச்சகத்திற்கும், வங்கி தலைமை அதிகாரிகளுக்கும் தேர்வு தேதியை மாற்ற வலியுறுத்தி கடிதம் எழுதினேன்.

இதேபோன்று பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் தேதியை மாற்றாமல் உள்ளனர். தமிழர் திருநாளான பொங்கல் நாளன்று தேர்வு வைப்பதுபோல், விநாயகர் சதுர்த்தி அன்று வைப்பீர்களா? தமிழர் மீதுள்ள விரோதம், குரோதத்தின் வெளிப்பாடாக இந்த நாளை தேர்தெடுத்து தேர்வு அறிவித்துள்ளனர்.

இந்த தேர்வை மாணவர்கள் தமிழிலும் எழுதலாம். தேர்வு நாளன்று வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்து தேர்வு பணியாற்ற வேண்டும்.இது மாணவர்கள், வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல ஆறரை கோடி தமிழர்களின் உணர்வு சம்பந்தபட்ட பிரச்சனை. இந்த பிரச்சினைக்கு முழுமுதல் காரணம் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும்தான். திருவள்ளுவர் வேஷம் போட்டாலும், காசி சங்கமம் நடத்தினாலும் உங்களின் உள்ளத்தில் உள்ளது வர்ணாசிரம வெறியும், இந்தி – சமஸ்கிருத வெறியும்தான். இந்திய தேசிய இனங்கள், மொழிகள் மீது அவர்களுக்கு துளியும் மரியாதை கிடையாது. இந்த திமிரை ஒடுக்குகிற தைரியம் தமிழ்ச் சமூகத்திற்கு உள்ளது.

நிதியமைச்சகம், வங்கி நிர்வாகத்திடமும் மீண்டும் மீண்டும் பேசிய பிறகும், ஒற்றை மொழி, ஒற்றை பண்பாடு, ஒற்றை மதம் என்ற ஆணவப் போக்கோடு செயல்படுகின்றனர். ரம்ஜான் அன்று நிலைக்குழு கூட்டத்தை அறிவிக்கிறார்கள். எனவே, இது ஒரு தேர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல, இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய தத்துவப் போராட்டத்தின் ஒருபகுதியாக இந்த போராட்டம் நடக்கிறது” என்று அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து வங்கி அதிகாரிகள் சு. வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்களை வட்டார தலைமை பொது மேலாளர் ரா.ராதாகிருஷ்ணன் அழைத்து பேசினார். அப்போது, உறுதியான பதிலை கூறாததால் வெங்கடேசன் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. ஆகியோர் வங்கிக்கு வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.