சென்னை: புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்றைய (ஜன.13) கேள்வி நேரத்தின்போது, புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்று சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு,” புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசித்து, தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி (ஜன 9) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்றுடன் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் புதுக்கோட்டை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.