2023-ம் ஆண்டின் பொங்கல் விஜய் ரசிகர்களுக்கா அல்லது அஜித் ரசிகர்களுக்கா என்கிற போர் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தது. வெகு நாட்களாகவே வாரிசு பொங்கல் vs துணிவு பொங்கல் என்கிற தலைப்பு தான் பலரது கண்களில் பட்டும், காதுகளில் கேட்டும் இருக்கும். ஒருவழியாக இரண்டு படங்களும் வெளியாகிவிட்டது, படம் வெளியானபோதிலும் இன்னும் இந்த பிரச்சனை தணியவில்லை. இந்த ஆண்டு பொங்கலின் வெற்றியாளர் வாரிசா? துணிவா? என்கிற பேச்சு எழுந்துகொண்டு தான் இருக்கிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த துணிவு படம் ஜனவரி 11ம் தேதி இரவு சரியாக 1 மணியளவில் அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில், பட வெளியீட்டு நாளில் சில துயர சம்பவங்களும் நடைபெற்றது.
அஜித் ரசிகர் ஒருவர் லாரியில் அடிப்பட்டு இறந்தது, மற்றொரு ரசிகருக்கு கால் முறிவு என ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு நாளில் பல சோகங்களும், கலவரங்களும் நடந்தேறியது. ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு‘ படங்கள் வெளியான திரையரங்குகள் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து திருவிழா போன்று காட்சியளித்தது. தற்போது இந்த இரண்டு படங்களில் எந்த படம் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக வந்திருக்கிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கும் நிலையில், தற்போது இதுகுறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரையிலும் விஜய்யின் ‘வாரிசு’ படத்தை காட்டிலும், அஜித்தின் துணிவு படம் தான் பொங்கல் வெற்றியாளராக மாறியிருப்பதாக தெரிகிறது. அதே சமயம் இந்திய அளவில் பார்க்கையில் அஜித்தின் துணிவு படத்தை காட்டிலும், விஜய்யின் ‘வாரிசு’ படம் பொங்கல் வெற்றியாளராக இருப்பதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் ‘வாரிசு’ படத்தை காட்டிலும் ‘துணிவு’ படம் அதிகம் வசூல் செய்திருப்பதால் ‘துணிவு’ படக்குழு மகிழ்ச்சியில் இருந்து வருகிறது. மறுபுறம் வாரிசு படம் தெலுங்கில் வெளியாகாமல் இருந்தும் கூட படம் இந்திய அளவில் துணிவை விட அதிக எண்ணிக்கையில் வசூலை பெற்றிருப்பதை நினைத்து வாரிசு படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகிறது. இப்போது விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை பார்ப்போம். வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படம் இந்திய அளவில் ரூ.26.5 கோடி வசூலையும், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படம் ரூ.26 கோடியை வசூலித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.