இந்தியாவிலேயே அதிகம் பேர் சுற்றிப்பார்த்த தலம், தமிழ்நாடு: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

கோவை: கோவை உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: நமது சுற்றுலாத்துறை இந்தியாவிலேயே முதன்மையாக உள்ளது. ஆன்மிக சுற்றுலாவுக்காக தமிழகத்திற்கு அதிகம் பேர் வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு வருகை புரிந்து அந்த கலைகளை ரசித்து பாராட்டுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிபார்த்து மேம்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் சுற்றுலா துறையின் வளர்ச்சி இரண்டு மடங்காக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்தாண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 12 லட்சம் பேர் வந்து உள்ளனர். உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 11 கோடி பேர் வந்துள்ளனர் இந்தியாவில் அதிகம் பேர் சுற்றி பார்த்த சுற்றுலா தலமாக தமிழ்நாடு உள்ளது. சுற்றுலா தலங்களில் உள்ள ஓட்டல்களில் சீசன் மற்றும் சீசன் இல்லா காலம் என பிரிக்காமல் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.