குடிநீரில் மலம் கலந்த விவகாரம்: சமூகநீதி கண்காணிப்புக்குழு ஆய்வு – கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன்!

புதுக்கோட்டை அருகே இறையூர் வேங்கைவயலில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, வெள்ளனூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். 11 பேர்கொண்ட போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு சாதியத் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை அறிந்தனர். அதையடுத்து, பட்டியலின மக்களை அதிகாரிகள் அய்யனார் கோயிலுக்குள் அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர்களை அவதூறாகப் பேசிய சிங்கம்மாள் என்பவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.

ஆட்சியர் கவிதா, எஸ்.பி வந்திதா பாண்டே

இதேபோல், இரட்டை டம்ளர் முறை கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறி அங்கிருந்த டீக்கடை உரிமையாளர் மூக்கையாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர். இவர்கள் ஜாமீன் கோரி புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். முதலில் வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா ஜாமீன் வழங்க மறுத்து டிஸ்மிஸ் செய்தார். தொடர்ந்து, ஜாமீன் கோரி அதே நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு, தற்போது இரண்டு பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி சத்யா உத்தரவிட்டிருக்கிறார். 19-ம் தேதி ஜாமீனுக்கான தொகையைச் செலுத்திய பின்னர் வெளியே செல்லலாம் என்று தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையேதான், அரசு சார்பில் பேராசிரியர் சுவாமிநாதன் தேவதாஸ் தலைமையிலான சமூகநீதி கண்காணிப்புக் குழுவினர் சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வுசெய்தனர். குடிநீர்த் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பொதுமக்களிடமும் விசாரணை நடத்தினர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி இருவரையும் சந்தித்து கலந்துரையாடினர். அப்போது பேசிய சமூகநீதி கண்காணிப்புக்குழுவினர், “வேங்கைவயலில் தீண்டாமை வன்கொடுமை இருந்ததால்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. உண்மையான குற்றவாளிகளைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும், அதுதான் அரசின் நோக்கம். அதற்கான முயற்சியில்தான் காவல்துறையும் ஈடுபட்டுவருகிறது” என்றனர். இந்த நிலையில்தான், இரட்டை டம்ளர் முறையைக் கடைப்பிடித்ததாக மூக்கையா என்பவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார்

ஆலோசனை

மூக்கையாவைக் கைதுசெய்ததிலிருந்து அவர் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது அவர் தாயார் இறந்துவிட்டார். 19-ம் தேதிதான் மூக்கையா ஜாமீனில் வரலாம் என்பதால், தாய்க்கு இறுதிச்சடங்கு செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மூக்கையா தாயாரின் இறப்பைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது குறித்து, அவர்களின் உறவினர்கள் சிலரிடம் கேட்டபோது, “எங்க ஊர்ல இரட்டை டம்ளர் முறை எல்லாம் இல்லை. வெளியூர்ல இருந்து வந்த சிலர்தான் கிளப்பி விட்டுட்டாங்க. பட்டியல் சமூக மக்களும், நாங்களும் உறவுக்காரங்கபோலதான் பழகிக்கிட்டு இருக்கோம். நல்லா இருந்த ஊரை கலவர ஊராக மாத்திட்டாங்க. மூக்கையாவை கைது செஞ்சப்போ, படுத்தவங்க அவங்க அம்மா… ஆகாரம் தண்ணி இல்லாம, இப்போ இறந்துட்டாங்க. மூக்கையா வந்து இறுதிச்சடங்கு செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கணும்” என்றனர்.

இதற்கிடையில், குடிநீரில் மலம் கலந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.