திருவனந்தபுரம்: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல் லட்சத்தீவு எம்பியாக பதவி வகித்தார். இவர் கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பி.எம்.சயீத்தின் மருமகன் முகமது சாலேயை கொலை முயன்றதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கவரட்டி செஷன்ஸ் நீதிமன்றம், முகமது பைசல் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 11ம் தேதி தீர்ப்பளித்தது. இந்நிலையில், முகமது பைசல் எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மக்களவை செயலகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘அரசியலமைப்பு சட்டத்தின் 102 (எல்)(இ) விதிகளின்படி,1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8வது பிரிவின்படி, மக்களவை உறுப்பினர் முகமது பைசலுக்கு எதிரான குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுகிறார். இந்த உத்தரவு ஜனவரி 11ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும்’ என கூறப்பட்டுள்ளது. தற்போது முகமது பைசல் கேரளாவின் கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
