சென்னை: இந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்த ஆய்வறிக்கையை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்த வருவாய் வரவுகள் ரூ.2.31 லட்சம் கோடி. அதில் 2022 செப்டம்பர் வரையிலான அரையாண்டில் மாநில அரசின் மொத்த வருவாய் ரூ.1.12 லட்சம் கோடியாக உள்ளது. இது பட்ஜெட்டில் கணிக்கப்பட்ட வருவாய் வரவில் 48.46 சதவீதம்.
2021-22-ம் நிதி ஆண்டில் அதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாய் வரவுகளைவிட 31.61 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளது. சொந்த வரி வருவாயாக அரையாண்டில் ரூ.72,441 கோடி பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடும்போது இது 36.92 சதவீதம் அதிகம்.
2022-23-ம் நிதி ஆண்டில் மாநில அரசின் செலவினம் ரூ.2.84 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டது. செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் செலவினம் ரூ.1.16 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில்இதே காலகட்டத்தில் செலவினம் ரூ.94,628 கோடி. இந்த ஆண்டு 22.93 சதவீதம் செலவினம் அதிகரித்துள்ளது. சம்பளம், ஓய்வூதியம், வட்டி செலுத்துதல் போன்றவை அதிகரித்ததால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
முதல் அரையாண்டில் சம்பளமாக மட்டும் ரூ.37,621கோடி, ஓய்வூதியத்துக்காக ரூ.16,226 கோடி செலவிடப்பட்டுள்ளது. ரூ.16,117 கோடி வட்டி செலுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த ஆண்டு செலவினம் ரூ.3.28 லட்சம்கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் அரையாண்டில் ரூ.1.31 லட்சம் கோடி செலவாகியுள்ளது. பற்றாக்குறை ரூ.18,726 கோடியாக உள்ளது.