2019-ல் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடித்ததையடுத்து பா.ஜ.க கொண்டுவந்த மிக முக்கிய அரசியல் நகர்வு குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ). பல்வேறு அரசியல் எதிர்ப்புகளையும் கடந்து தன்னுடைய பெரும்பான்மையால் பா.ஜ.க இந்த சட்டத்தைக் கொண்டுவந்தது. அப்போது சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், சிஏஏ மூலம் சிறுபான்மையினரை முக்கியத்துவமற்றவர்களாக மாற்றுவதுதான் பா.ஜ.க-வின் நோக்கம் எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமர்த்தியா சென், “நான் பார்க்கிற வரையில், சிஏஏ-வை அமல்படுத்துவதன் மூலம், சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குறைப்பதும், அவர்களை முக்கியத்துவமற்றவர்களாக மாற்றுவதும், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்து பெரும்பான்மை சக்திகளை அதிகரிப்பதும் தான் பா.ஜ.க-வின் நோக்கம்.

மதச்சார்பற்ற, சமத்துவ தேசமாக இருக்க வேண்டிய இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் மிகவும் துரதிஷ்டமானது, அடிப்படையில் இதுவொரு மோசமான நடவடிக்கை என்று எண்ணுகிறேன்” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் முன்னேற்றமடைந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒவ்வோர் இந்தியருக்கும் சில உரிமைகள் உள்ளன என்ற அங்கீகாரம் தான் இந்தியாவுக்குத் தேவை” என்றார்.