சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த வேலுமதி மற்றும் அவரது தாயார் கனகம் உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டு வீட்டிலிருந்த 60 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.
மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், கனகத்தின் பேத்தியின் திருமணத்தை நடத்த வழி தெரியாமல் அந்த குடும்பம் திக்கி திணறி உள்ளது.
இதையடுத்து, கிராம மக்கள் சார்பில் அந்த குடும்பத்திற்கு உதவுவது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் கிராம அம்பலத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரட்டை கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்வது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பெண்ணின் திருமணத்தை நடத்துவதற்கு கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிதியுதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.