*சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள செங்கமடை கிராமத்தில் சேதுபதி மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க ஆறுமுக கோட்டை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆர்.எஸ் மங்கலம் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே செங்கமடை கிராமத்தில் ஊருக்கு கிழக்கே ஆறுமுககோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டையை சேதுபதி மன்னர்களில் ஒருவரான முத்துவிஜயரகுநாத சேதுபதி பிரஞ்சு பொறியாளர்களை கொண்டு கட்டியதாக கூறப்படுகின்றது.
இந்த செங்கமடை ஆறுமுக கோட்டையை செங்கல், சுண்ணாம்பு, கடுக்காய் கருப்பட்டி போன்றவை பொருட்களை கொண்டு மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது. இந்த கோட்டையின் கட்டுமான அமைப்பானது 6 இதழ்களை கொண்ட ஒரு மலர் போன்ற வடிவில் அமைந்திருந்ததால் இந்த கோட்டையை ஆறுமுக கோட்டை என்று அழைக்கப்பட்டு வருகின்றது.
மேலும் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோட்டையின் உள்பகுதியில் இருந்து எதிரிகளை தாக்கும் விதமாக, சுவர்களில் துளைகள் அமைக்கப்பட்டு அந்த துளைகளின் வழியாக துப்பாக்கியால் எதிரிகளை சுடும் வகையில், துளைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆங்கிலேயர்கள் படையெடுப்பில் மன்னர்களால் கட்டப்பட்டிருந்த கோட்டைகள் பல அழிக்கப்பட்டன. அதே போல் ராமநாதபுரம், சேதுபதி மன்னர்களின் பல கோட்டைகளையும் அழிக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தின் போது இக்கோட்டையும் சிதைக்கப்பட்டது.
இதில் கோட்டையின் எஞ்சிய மதில் சுவர்கள் மட்டுமே மன்னர்கள் கால கோட்டை குறித்த அடையாளச் சின்னமாக இன்றளவும் உள்ளது. மேலும் இந்த கோட்டைக்குள் மன்னர் காலத்திலேயே அங்கு உள்ள படை வீரர்களையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியும் போரில் வெற்றி பெற வேண்டியும் கோட்டை முனீஸ்வரர் மற்றும் காவல் தெய்வம் கருப்பசாமி என்ற தெய்வத்தையும் வைத்து படையல் போட்டு வழிபட்டு வந்துள்ளனர். இந்த தெய்வங்களானது அந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடைய மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வமாக இன்றளவும் கருதப்பட்டு வருகிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க கோட்டை அமைந்துள்ள பகுதியில் சுமார் 20 கி.மீ தூரத்திற்கு அமைந்துள்ள ஆற்றிற்கும் இந்த கோட்டையின் பெயருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அந்த ஆற்றையும் கூட கோட்டைகரை ஆறு எனவே அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோட்டையின் சுற்று பகுதி மற்றும் ஆற்றின் உட்பகுதியும் கருவேல முட்புதர்கள் மண்டிகாடு போல் காட்சியளிகின்றனர். இதனால் இப்பகுதி முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது.
இந்த கோட்டைக்கு செல்வதற்காக திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் இருந்து சுமார் 1 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை சேதமடைந்து விட்டது. இதனால் இந்த சாலை வழியாக கோட்டை அய்யா கோவில் செல்லும் டூவீலர்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்களும், பாதசாரியாக நடந்து செல்லும் பக்தர்களும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே சேதுபதி மன்னர்கள் கால அடையாள சின்னங்களில் ஒன்றாகத் திகழும் பாரம்பரியமான வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோட்டையின் மதில் சுவர்களை நமது வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாத்து சீரமைத்திடவும், கோட்டைகரை ஆறு மற்றும் கோட்டை பகுதிகளில் அடர்ந்து காணப்படும் கருவேல முட்புதர்களை அகற்றிடவும். கோட்டைக்கு செல்லும் சாலையை சீரமைத்திடவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.