சென்னை: பொங்கல் பண்டிகை நேரத்தில் தங்கம் விலை அதிரடியாக, சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. இந்த விலை உயர்வு வீடுகளில் சுபநிகழ்ச்சி வைத்துள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை, கடந்த மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று 28 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் தங்கம் விலை ரூ.41,040க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 11ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.41,486க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 12ம் தேதி முதல் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.41,888க்கு விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5,250க்கும், சவரன் ரூ.42,000க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.42 ஆயிரத்தை தொட்டது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.46 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,296க்கும், சவரனுக்கு ரூ.368 என்று உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,368க்கும் விற்கப்பட்டது. இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை நேரத்தில் தங்கம் விலை உயர்வு வீடுகளில் திருமணம், கிரகபிரவேசம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை வைத்துள்ளோருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்க மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும்.