தமிழ்நாடு பாஜகவின் கனவுகளை தவிடுபொடியாக்கும் ஆளுநர் ரவி!

தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளதாக ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார். இந்த கருத்தை அவர் எந்த அளவிற்கு உள்வாங்கியிருக்கிறார் என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டின் அரசியலை சரியாக புரிந்து வைத்திருப்பவறாயின், அவரது செயல்கள் இதுபோன்று இருக்காது என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. 2014, 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று ஒன்றிய அரியணையை பாஜக அலங்கரித்துள்ளது. அதற்கு நாடு முழுவதும் மோடி அலை வீசியதாக பாஜகவினர் பெருமிதப் பட்டுக் கொண்டனர். ஆனால், அந்த சமயங்களில்கூட, தமிழ்நாடு வேறு விதமான முடிவையே எடுத்தது.

தேசியக் கட்சிகளை இன்னமும் தமிழ்நாட்டு மக்கள் அந்நியமாகவே பார்க்கின்றனர் என்பதையும், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் வித்தியாசமானது என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் அரசியலை உணர்ந்து, தமிழர்களின் இதயங்களைக் கைப்பற்றுவதற்கு மொழியும், பண்பாடும் முக்கிய கருவிகள் என்பதை உணர்ந்த பாஜக அதன் வியூகத்தில் மாற்றத்தை கொண்டு வந்து செயல்படத் தொடங்கியுள்ளது. காசி தமிழ் சங்கமம், தமிழ் மொழியின் பாரம்பரியம், கலாசாரம் குறித்து ஒவ்வொரு மேடைகளிலும் பிரதமர் மோடி பேசுவது என இவை அனைத்துமே அந்த வியூகங்களின் ஒருங்கிணைந்த பகுதிதான்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் திராவிட அடையாளத்தைத் தழுவுவதற்கு முயற்சித்து வருகிறார். இது கட்சியின் ஹிந்தி மற்றும் இந்துத்துவா பிம்பத்தை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கை. ஆனால், மொழி, தமிழ் கலாசாரம், அடையாளம் ஆகியவை குறித்து ஆளுநர் ரவி தொடர்ந்து தெரிவித்து வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தமிழ்நாட்டில் காலூன்றும் பாஜகவின் கணவுகளை வீணாக்கிவிடும் என அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

ரவியின் சமீபத்திய பேச்சுக்கள், குறிப்பாக, தமிழ்நாட்டை விட தமிழகமே பொருத்தமாக இருக்கும் என்றது, தமிழ்நாடு என்ற வார்த்தையை உபயோக்கிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது, சமூகநீதி போன்ற வார்த்தைகளை தவிர்த்தது, தமிழ்நாட்டை செதுக்கிய அரசியல் தலைவர்களின் பெயர்களை தவிர்த்தது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தியை தமிழ்நாட்டில் மறைமுகமாக புகுத்த ஆளுநர் ரவி முயற்சிகிறார். மாநில அரசியலை பிற்போக்குத்தனமானது என்று கூறுகிறார். பாஜக கூட இதுபோன்ற விஷயங்களில் தலையிடாமல் பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்கிறது. தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டால் எதிர்ப்பேன் என்றும், தன்னை ஒரு கறுப்பு திராவிடன் என்றும் கூறி தமிழர்களுடன் நெருங்கி பழகும் அண்ணாமலையின் முயற்சிக்கு ஆளுநரின் கருத்துக்கள் முரணானது.

இதுபோன்று தமிழர்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர்த்துவிட்டு, ஆளுங்கட்சியின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி
திமுக
vs அதிமுக என்ற நிலையில் இருந்து திமுக vs பாஜக என்ற சூழலுக்கு அரசியல் களத்தை, தமிழ்நாடு பாஜக நகர்த்தி வருகிறது. ஆனால், ஆளுநரின் சர்ச்சை கருத்துக்கள், பாஜகவின் தமிழ்நாட்டு கனவுகளை தவிடுபொடியாக்கி வருவதுடன், பாஜகவின் திட்டங்களை உடைக்கும் திமுகவின் முயற்சிகளுக்கு கைகொடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தமிழகத்தில் பாஜக கட்டமைக்க முயன்ற அனைத்தையும் ஆளுநர் உடைத்து விட்டார். ஆளுநர் பதவியை மிக அப்பட்டமாக அம்பலப்படுத்தி, தமிழர்களின் கலாசாரத்துடன் விளையாட முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டும் அரசியல் விமர்சகர்கள், பாஜகவின் உண்மையான முகத்தையும் அவர்கள் எதன் பக்கம் நிற்கிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்தி வருகிறார் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.