தமிழ் புத்தாண்டு, தைப்பொங்கல் வாழ்த்துக்கள் – மருத்துவர் இராமதாஸ்!

தமிழர் வாழ்வில் தைத்திருநாள், தமிழ் புத்தாண்டு தடைகளை தகர்த்து வழிகளை உருவாக்கட்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், “இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் முதன்மைத் திருநாளான தைப்பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 ‘தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தைகளுக்கேற்ப தமிழர்களின் பெருமைமிகு தனிச்சிறப்புகளில் ஒன்று தான் தைப்பொங்கல் திருநாள் ஆகும். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. அதுமட்டுமின்றி, மதங்களைக் கடந்த திருநாள் என்ற பெருமையும் பொங்கலுக்கு உண்டு. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர்கள் வீடுகளில் தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு  மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

உலகில் இயற்கையை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் தான். வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும்  உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் இனமும் தமிழினம் தான். இந்த இரு உன்னத செயல்களுக்கும் தமிழர்கள் பயன்படுத்திய கருவி தான் பொங்கல் திருநாள் ஆகும். உழைப்பாளிகளுக்கும் கொண்டாட்டங்கள் தேவை என்பதை உலகிற்கு உணர்த்தும் திருநாள் தைப்பொங்கல் ஆகும். அந்த வகையில் அது சிறப்பானது.

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. கல்வி, தொழில், வணிகம், சமூகநீதி உள்ளிட்ட அனைத்திலும் தடைகளை தகர்த்து புதிய வழிகளை தைத் திருநாள் உருவாக்கித் தர வேண்டும்  என்பது தான் நமது எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

அந்த அறிகுறிகள் முழு வெற்றிகளாக வேண்டும். தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலுமுள்ள அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்; அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை  செழிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில்  தைப்பொங்கல் திருநாளும், தமிழ்ப்புத்தாண்டும் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும் என்று கூறி உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.