*வியாபாரிகள் குவிந்தனர்
புதுக்கோட்டை : பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. இதில் வியாபாரிகள் குவிந்ததால் நேற்று ஒருநாள் மட்டும் ₹1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. புதுக்கோட்டை சந்தைபேட்டையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமில்லாமல் திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்பட பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து ஆடுகளை மொத்தமாக வாங்கி செல்வது உண்டு. இதேபோல் ஆடு வளர்ப்போரும் வந்து ஆடுகளை விற்பனை செய்வார்கள்.
தீபாவளி, ரம்ஜான் மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் இந்த சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று சிறப்பு ஆட்டு சந்தையாக நடைபெற்றது. இந்த சந்தைக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து செம்மறி ஆடுகளும், வெள்ளாடும் என மொத்தம் 2,500க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது. வழக்கமாக செம்மறி ஆடுகளின் விற்பனை அதிகமாக இருந்து வரும் நிலையில், பொங்கல் தினத்தை முன்னிட்டு கோயில் பூஜைக்காக வெள்ளாடு விற்பனை நேற்று அதிகமாக இருந்தது. இதில் குறிப்பாக ஒரு ஆட்டிற்கு வழக்கத்தை விட ₹500 முதல் ₹1000 வரை விலை அதிகரித்து இருந்தது. அதே நேரத்தில் ₹ 5,000 முதல் ₹25 ஆயிரம் வரை ஆடுகள் விற்கப்பட்டது.
கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து இருந்ததால் கடந்த சில வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த விற்பனை சற்று அதிகரித்து இருந்தது. இன்று (நேற்று) நடைபெற்ற சந்தையில் ஆடுகள் வரத்து சற்று அதிகமாக இருந்தாலும் பனிப்பொழிவு, அறுவடை காலம் என்பதால் எதிர் பார்த்த அளவுக்கு விவசாயிகள் ஆடுகளை கொண்டு வராததால் வரத்து குறைவாக இருந்தது. இன்று (நேற்று) ஒரே நாளில் ₹1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.