மே.வங்காளம்: அமைச்சரிடம் புகாரளித்த உள்ளூர்வாசியின் கன்னத்தில் அறைந்த திரிணாமூல் ஊழியர்!

உள்ளூர் வசதிகள் குறித்து அமைச்சரிடம் புகாரளிக்கச் சென்ற நபரை திரிணாமூல் காங்கிரஸ் ஊழியர் ஒருவர் பொதுவெளியில் வைத்து கன்னத்தில் அறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பார்கானாஸ் மாவட்டத்தில் இச்சாபூர்-நீல்கஞ்ச் பகுதியில் ‘Didir Suraksha Kavach’என்கிற ’மூத்த சகோதரியின் பாதுகாப்பு கவசம்’ என்ற திட்டத்தின் துவக்கவிழா நடைபெற்றது. இதில் மாநில உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் ரதின் கோஷ் கலந்துகொண்டார். இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவின் வழியாக பொதுமக்களிடம் உரையாடி அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை தெரிந்துகொள்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உள்ளூர்வாசியான சாகர் பிவாஸ் என்பவர், அப்பகுதியிலுள்ள சில பிரச்னைகள் பற்றி எடுத்துக்கூற அமைச்சரிடம் சென்றபோது, அங்கிருந்த உள்ளூர் திரிணாமூல் கட்சி ஊழியர் ஒருவர் சாகரை கன்னத்தில் ஓங்கி அறைந்து, அந்த பகுதியிலிருந்தே சாகரை துரத்தியுள்ளார்.
image
இதுகுறித்து சாகர் ஊடகங்களிடம் பேசுகையில், அந்த நிகழ்ச்சியில் நடந்தது பற்றி மீடியாக்களிடம் எதுவும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டினார்கள் என்று கூறினார். ஆரம்பத்தில் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அமைச்சர் ரதின் கோஷ், பின்னர் சாகரிடம் எதிர்பாராத விதமாக நடந்ததாகக்கூறி வருத்தம் தெரிவித்தார்.
”அங்கு என்ன நடந்தது என எனக்கு தெளிவாக தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொல்வதுபோல் நடந்திருந்தால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இப்படி நடந்திருக்கக்கூடாது. நான் மிகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கோஷ் ஊடகங்களிடம் தெரிவித்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.