சென்னை: தமிழ்நாடு என சொல்லக் கூடாது என்று யாரோ புலம்பிக் கொண்டு உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி செயலியை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “அண்ணா உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு உடனடியாக செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். அதற்குப் பிறகு வந்தார், வந்ததற்குப் பிறகு ஒரே ஒரு நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டார். எந்த நிகழ்ச்சி தெரியுமா? தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய விழா.
அந்த விழா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது Children’s Theatre என்று அதற்குப் பெயர். அங்குதான் அவ்விழா நடைபெற்றது. அப்போது நான் முரசொலியில் வேலை செய்து கொண்டிருந்தோன் 1000 ரூபாய்க்கு. அவருடைய பேச்சை tape பண்ணினோம்.
அப்போது வீடியோ எல்லாம் கிடையாது. Tape செய்வதற்காக கையில் ஒரு tape recorder எடுத்துச் சென்று, அவர் பேசுகிற மேடை, மைக் இதுபோன்று ஸ்டூல் எல்லாம் கிடையாது, வெறும் மைக்தான் இருக்கிறது. அவர் கால்மாட்டில் கீழே உட்கார்ந்துகொண்டு அந்த டேப்பை போட்டு டேப் செய்து கொண்டிருக்கிறேன். பேசினார், பேசிக் கொண்டே இருக்கிறார், என்னை இந்த நிகழ்ச்சிக்கு போகக்கூடாது என்று என் குடும்பத்தினர் தடுத்தார்கள், கட்சியினுடைய முன்னோடிகள் போகக்கூடாது என்று கட்டாயப்படுத்தினார்கள், மருத்துவர்கள் போகவே கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.
அத்தனையையும் மீறி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன், ஏன் தெரியுமா? தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் கிடைக்கிறபோது அப்படி பெயர் சூட்டப்படக்கூடிய அந்த விழாவிலே கலந்து கொள்ளவில்லை என்று சொன்னால், இந்த உயிர் இருந்து என்ன பயன்? அப்படியென்று சொன்னவர் அண்ணா.
இன்றைக்கு யாரோ தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று புலம்பிக் கொண்டிருக்கிறாரே, நான் கேட்கிறேன். அதற்கு மேல் விளம்பரம் கொடுக்க வேண்டாம். எதற்காகச் சொல்கிறேனென்றால், இப்படிப்பட்ட வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய இயக்கம்தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கழகத்தினுடைய துணை அமைப்புகளில் ஒன்றான இளைஞரணியும் இந்த வரலாற்றைப் பெற்றிருக்கிறது, அந்த வரலாற்றை பேணிப் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தம்பி உதயநிதியிடத்திலே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், உங்களை நம்பி, நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற அந்த உணர்வோடுதான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்தக் கடமையை நிறைவேற்றித் தரவேண்டும் என்று கேட்டு, வாழ்க தமிழ்நாடு! வாழ்க தமிழ்நாடு!” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.